×

அதிகாரிகளின் அலட்சியத்தால் சீரழிந்து கிடக்கும் சிங்காடிவாக்கம் சிவன் கோயில் தாமரைகுளம்: கிராம மக்கள் வேதனை

வாலாஜாபாத்: அறநிலையத்துறை அதிகாரிகள், முறையாக பராமரிக்காமல் விட்டதால், வாலாஜாபாத் ஒன்றியம், சிங்காடிவாக்கம் ஊரட்சி சிவன் கோயில் குளம் சீரழிந்து கிடக்கிறது. இதனை உடனடியாக சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  வாலாஜாபாத் ஒன்றியம் சிங்காடிவாக்கம் ஊராட்சியில் 1500க்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்குள்ள மக்கள் கால்நடை வளர்த்தல், விவசாயத்தை முக்கிய தொழிலாக செய்து வருகின்றனர். இதே கிராமத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பாரம்பரியம் மிக்க திவாலீஸ்வரர் கோயில் அமைத்துள்ளது. அறநிலைத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோயிலின் அருகில் தாமரைக்குளம் உள்ளது.  இந்த தாமரைகுளம் முறையாக தூர்வாரி பராமரிக்கப்படாததால், தற்போது தாமரை,  புள் முளைத்தும்,  கரை சிதலமடைந்து மக்கள் பயன்படுத்த முடியாத அளவுக்கு பாழடைந்து காணப்படுகிறது.

கடந்த பல ஆண்டுகளுக்கு முன், இந்த குளத்தின் நீரை, குடிநீராகவும், சமையலுக்கு மக்கள் பயன்படுத்தினர். பின்னர், மக்கள் தொகை அதிகரித்ததால், இந்த தண்ணீர் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. ஆனாலும், கோயில் விசேஷங்களுக்கு இந்த குளத்தின் நீரை பயன்படுத்தி வந்தனர். ஆனால், அறநிலையத்துறை அதிகாரிகள், குளத்தை முறையாக பயன்படுத்தாமல் விட்டு விட்டனர். இதனால், நாளுக்கு நாள் மாசடைந்து வருகிறது. இக்கோயில் குளத்தை சீரமைக்க வேண்டும் என பலமுறை முறையிட்டும், அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர் என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், சிங்காடிவாக்கம் ஊராட்சி இந்த ஊராட்சியில் மிகவும் பழமை வாய்ந்த சிவன் கோயில் உள்ளது.  கோயிலில் தினமும் பூஜைகள் நடத்தப்படுகிறது. ஆனாலும் கோயிலின் அருகில் உள்ள குளம் முறையாக பராமரிக்கவில்லை.

இதனால், குளத்தின் கரைகள் முழுவதும் ஆங்காங்கே சரிந்து விழுந்து கிடக்கின்றன. இந்த குளத்தை தூர்வாரி, ஆழப்படுத்தி மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கிராம மக்கள் மற்றும்  அப்துல்கலாம் நற்பணி மன்றம் சார்பிலும் அதிகாரிகளுக்கு பலமுறை தகவல் தெரிவித்தோம். ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கையும் இல்லை. தற்போது பொறுப்பேற்றுள்ள தமிழக அரசு, அறநிலையத் துறை அதன் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களையும் சீரமைத்து துரித நடவடிக்கை எடுத்து வருகிறது. அதேப்போல் சிங்காடிவாக்கம் கிராமத்தில் உள்ள பழமையான  சிவன் கோயிலையும் சீரமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Tags : Singadivakkam Shiva Temple Thamaraikulam , Shiva temple, villagers, torment
× RELATED அதிக நேரம் செல்போன் பயன்படுத்தினால்...