×

ஒன்றிய அரசை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டம்



காஞ்சிபுரம்:  காஞ்சிபுரத்தில் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழகத்தில் நாளுக்கு நாள் பெட்ரோல் டீசல் விலை உயர்வால் காய்கறிகள் கட்டுமான பொருட்களின் விலை ஏற்றத்தால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் காங்கிரஸ் கமிட்டி சார்பில் தமிழகம் முழுவதும் ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தபடும் என அக்கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்தார். இதையொட்டி, காஞ்சிபுரம் காங்கிரஸ் கமிட்டி சார்பில் காஞ்சிபுரம் தாலுகா  அலுவலகம் எதிரில் அடுப்பு மூட்டி மாவட்ட தலைவர் அளவூர்நாகராஜன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் சைக்கிளை எடுத்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர்: பெரும்புதூர் வட்டார மற்றும் நகர காங்கிரஸ் சார்பில் ஸ்ரீபெரும்புதூர் பஸ்நிலையம் அருகில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம்  நடந்தது. ஸ்ரீபெரும்புதூர் நகர தலைவர் அருள்ராஜ் தலைமை வகித்தார். வட்டார தலைவர்கள் முருகேசன், நிக்கோலஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெட்ரோல், டீசல் மற்றும் காஸ் சிலிண்டர் விலை உயர்வை கண்டித்தும், விலை உயர்வை கட்டுப்படுத்தாத ஒன்றிய அரசை கண்டித்து கோஷமிட்டனர்.

செய்யூர்: செங்கல்பட்டு மாவட்டம் செய்யூர் பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் எதிரே பெட்ரோல், டீசல், காஸ் விலை உயர்வை கண்டித்து தமிழக காங்கிரஸ் சார்பில் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. செய்யூர் தொகுதி காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு தலைவர் விஜயசேகர் தலைமை தாங்கினார். சிறுபான்மை பிரிவு மாநில துணை தலைவர் ஸ்டீபன், மாவட்ட தலைவர் மோசஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் 50க்கு மேற்பட்டோர் கலந்து கொண்டு  எரிவாயு சிலிண்டருக்கு மாலை அணிவித்து தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து பெட்ரோல், டீசல், எரிவாயு விலையை குறைக்காத ஒன்றிய அரசை கண்டித்து கண்டன கோஷட்டனர்.

கூடுவாஞ்சேரி: வண்டலூரில் தமிழ்நாடு கனிமவள டிப்பர் லாரி இயந்திர உரிமையாளர்கள் நலச்சங்கம் சார்பில், அதன் தலைவர் ஐ.கே.எஸ் நாராயணன் தலைமையில் டீசல் விலை ஏற்றத்தை கண்டித்து டிப்பர் லாரியை கயிறு கட்டி இழுத்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் நலச்சங்க கூட்டமைப்பு தலைவர் யுவராஜ் உள்பட லாரி உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டு டீசல் விலையேற்றத்தை கண்டித்து, ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டபடி, லாரியை கயிறுகட்டி இழுத்தனர்.

மேலும், டீசல் விலையை ஜிஎஸ்டி வரிக்குள் கொண்டுவர, ஒன்றிய அரசுக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும், 4 மாதங்களாக இயங்காமல் உள்ள ஏரி சவுடு மண் குவாரிகளை அமைக்க தமிழக முதல்வர் உத்தரவிட வேண்டும். கொரோனா தடை காலத்தில் 6 மாதம் லாரிகள் இயங்கவில்லை. இதனால், 3 மாத வரியை ரத்து செய்ய வேண்டும். கொரோனா காரணமாக லாரி உரிமையாளர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதால், வங்கி மற்றும் நிதி நிறுவனங்களில் மாத தவணை தொகை கட்ட 6 மாதம் நீட்டிப்பு செய்ய வேண்டும் என கேட்டுக்கொண்டனர். முன்னதாக தாம்பரம் அடுத்த கிஷ்கிந்தா சாலையில் பெட்ரோல் பங்க் முன்பாக, டீசல் விலையேற்றத்தை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags : United States , Congress, protest
× RELATED இஸ்ரேல் மீது ட்ரோன், ஏவுகணை தாக்குதலை தொடங்கியது ஈரான்