2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊராட்சி உதவியாளர் கைது

பூந்தமல்லி: மதுரவாயல் அடுத்த அடையாளம்பட்டு ஊராட்சியை சேர்ந்த நபர் புதிதாக வீடு கட்டியுள்ளார். இந்த வீட்டுக்கு வரி நிர்ணயம் செய்வதற்காக அடையாளம்பட்டு ஊராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். அந்த விண்ணப்பத்தைப் பரிசீலனை செய்து வரி நிர்ணயம் செய்வதற்கு ஊராட்சி கணிணி அலுவலர் மற்றும் ஊராட்சி உதவியாளரான கமல்தாஸ் 2 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார்.

இதையடுத்து, அந்த நபர் சென்னை ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை அலுவலகத்தில் இதுகுறித்து புகார் செய்துள்ளார். அதன்பேரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுக்களை அந்த நபரிடம் கொடுத்து அனுப்பினர். அவரும் நேற்று அடையாளம்பட்டு ஊராட்சி உதவியாளரிடம் ரசாயனம் தடவிய நோட்டுக்களை லஞ்சமாக கொடுத்தார். அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் கமல்தாஸை கையும் களவுமாகப் பிடித்தனர். இதனைத் தொடர்ந்து கமல்தாஸ் மீது வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

Related Stories:

>