×

டெங்கு, ஜிகா வைரஸ் மிரட்டல்: குமரி முழுவதும் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரம்..! வீடு, வீடாக கள ஆய்வு

நாகர்கோவில்: குமரியில் கொசு மருந்து அடிக்கும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. நாகர்கோவில் மாநகரில் அதிகளவில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் 2 வது அலையின் தாக்கம் குறைந்துள்ள நிலையில், அண்டை மாநிலமான கேரளாவில் ஜிகா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. இதனால் கேரளாவையொட்டி உள்ள தமிழக எல்லையோர மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக சுகாதாரத்துறை தீவிரப்படுத்தி உள்ளது. கேரளாவில் இருந்து தமிழகத்துக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.  கேரளாவையொட்டி உள்ள குமரி மாவட்ட எல்லையோர கிராமங்களான களியக்காவிளை, பளுகல், இஞ்சிவிளை, செங்கவிளை, செறுவாரக்கோணம், குளப்புரம், நிலமாமூடு, கண்ணுமாமூடு, மூவோட்டுக்கோணம், புலியூர்சாலை, குளப்பாறை, பனச்சமூடு, கண்ணநாகம், கொல்லங்கோடு, ஊரம்பு உள்ளிட்ட கிராமங்களில் தற்போது கொசு ஒழிப்பு பணிகளை சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். கேரளாவில் இருந்து குமரிக்குள் நுழையும் அனைத்து வாகனங்களிலும் கிருமி நாசினி மருந்து தெளிக்கப்படுகிறது. ஜிகா வைரஸ் பாதிப்ப ஒருபுறம் மிரட்ட, தற்போது டெங்கு காய்ச்சல் பாதிப்பு குமரி மாவட்டத்தில் அதிகரித்துள்ளது.

குறிப்பாக நாகர்கோவில் மாநகர பகுதியில் காய்ச்சல் பாதித்தவர்கள் எண்ணிக்கை கடந்த இரு நாட்களாக அதிகமாக உள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.  ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், தனியார் மருத்துவமனைகளில் காய்ச்சலுக்கு பலர் சிகிச்சைக்காக வந்த வண்ணம் உள்ளனர். இவர்களில் சிலருக்கு டெங்கு பாதிப்பும் உறுதி செய்யப்பட்டு அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஏடிஎஸ் என்ற கொசு தான் டெங்கு மற்றும் ஜிகா வைரசை பரப்பி வருகிறது. இந்த வகையிலான கொசுக்கள் நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகும் என்பதால் சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறையினர் கேட்டுக் கொண்டுள்ளனர். இதற்கிடையே நாகர்கோவில் மாநகர பகுதியில் காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள நிலையில், மாநகராட்சி சார்பில் கொசு ஒழிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. வீடு, வீடாக   தற்காலிக பணியாளர்கள் கள ஆய்வு செய்து வருகிறார்கள். காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து அவர்களுக்கு சிகிச்சை மற்றும் ரத்த மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. கொசு மருந்து அடிக்கும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன. இயந்திரம் மூலம் தெருக்களில் கொசு மருந்துகள் தெளிக்கும் பணிகளை மாநகராட்சி ஆணையர் ஆஷா அஜித், நகர் நல அலுவலர் டாக்டர் கிங்சால் ஆகியோர் ஆய்வு செய்து வருகிறார்கள்.


Tags : Kumari , Dengue, Zika virus threat: Intensification of mosquito repellents across Kumari ..! House to house field study
× RELATED கன்னிப்பூ சாகுபடிக்கு ஆயத்தம்...