‘அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப்போவதில்லை’: இந்த ஆண்டு யு.எஸ். ஓபனில் கண்டிப்பாக விளையாடுவேன்..! ரோஜர் பெடரர் பேட்டி

லண்டன்: ‘இது உங்களுடைய கடைசி விம்பிள்டனா?’ என்ற கேள்விக்கு, ‘இன்னும் அதைப் பற்றி நான் யோசிக்கவில்லை. அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை’ என்று பதில் கூறியிருக்கிறார் டென்னிஸ் சகாப்தம் ரோஜர் பெடரர். அதே நேரத்தில் இந்த ஆண்டு யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாமில் கண்டிப்பாக விளையாடுவேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார். கிட்டத்தட்ட 22 ஆண்டுகளுக்கும் மேலாக சர்வதேச டென்னிஸ் உலகில் சாதனை வீரராக வலம் வந்து கொண்டிருக்கும் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் பெடரர், நடப்பு விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாமில், காலிறுதியில் போலந்தின் இளம் வீரர் ஹியூபர்ட் ஹர்காச்சிடம் நேர் செட்களில் தோல்வியடைந்து வெளியேறி இருக்கிறார். முதன் முதலாக கடந்த 2002ம் ஆண்டு விம்பிள்டனில் அவர் கால் பதித்தபோது, குரோஷியாவின் மரியோ அங்கிக்கிடம் நேர் செட்களில் தோல்வியடைந்தார். அதன் பின்னர் தற்போதுதான் விம்பிள்டனில் நேர் செட்களில் அவர் தோல்வியடைந்துள்ளார். மேலும் இந்த காலிறுதியில் அவர் 3வது செட்டை ஹர்காச்சிடம் 0-6 என இழந்துள்ளார். விம்பிள்டனில் 0-6 என ஒரு செட்டை அவர் இழந்தது இதுவே முதல் முறை.

கிராண்ட்ஸ்லாமில் இதற்கு முன்னர் 2 முறை (பிரெஞ்ச் ஓபன் 1999, 2008) மட்டுமே பெடரர் 0-6 என செட்டை பறிகொடுத்துள்ளார். விம்பிள்டன் பெடரரின் பேவரைட். விம்பிள்டனில் 8 முறை ஆடவர் ஒற்றையர் பட்டங்களை அவர் வென்றுள்ளார். அடுத்தபடியாக 6 முறை ஆஸி. ஓபனிலும், 5 முறை யு.எஸ். ஓபனிலும் ஆடவர் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். இடையில் ஒரே ஒரு முறை பிரெஞ்ச் ஓபனில் ஆடவர் ஒற்றையர் பட்டம் என 20 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்று, சாதித்துள்ளார். ஸ்பெயின் வீரர் ரஃபேல் நடாலும் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களை வென்றுள்ளார். செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச் 20 கிராண்ட்ஸ்லாம் ஒற்றையர் பட்டங்களுடன், இன்னும் நம்பர் 1 வீரராக வலம் வருகிறார். பெடரர் மற்றும் நடாலின் சாதனையை இவர் முறியடிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். விம்பிள்டன் காலிறுதியில் பெடரர் தோல்வியடைந்து வெளியேறிய போது, பார்வையாளர்கள் அனைவரும் எழுந்து நின்று, கைகளை தட்டி அவருக்கு விடை கொடுத்தனர்.

பின்னர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் பெடரர் கூறுகையில், ‘‘இது என்னுடைய கடைசி விம்பிள்டனா என்ற உங்களின் கேள்விக்கு, எனக்கு தெரியாது என்பதே பதில். நான் அவசரப்பட்டு எந்த முடிவும் எடுக்கப் போவதில்லை. இப்போதுதான் போட்டி முடிந்திருக்கிறது. நிதானமாக ஆற அமர்ந்து யோசிக்க வேண்டும். எல்லாவற்றையும் மனதில் தொகுக்க வேண்டும். பயிற்சியாளர், குடும்பத்தினர், பிசியோதெரபிஸ்ட் மற்றும் நண்பர்களுடன் நிறைய பேசி, அதன் பின்னரே முடிவெடுக்க வேண்டும். அதே நேரத்தில் இந்த ஆண்டு யு.எஸ். ஓபன் கிராண்ட்ஸ்லாமில் கண்டிப்பாக விளையாடுவேன். சர்வதேச டென்னிஸ் போட்டிகளில் தொடர்ந்து ஆட வேண்டும் என்பது எனது விருப்பம். ஆனால் வயதும், உடல்நிலையும் அதற்கு அனுமதிக்காது என்பது யதார்த்தம்’’ என்று தெரிவித்தார்.

Related Stories:

>