தமிழ்நாட்டு மக்களிடம் சாதி, மத வெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என வீண் கனவு காணாதீர்: கீ.வீரமணி எச்சரிக்கை

சென்னை : தமிழ்நாட்டு மக்களிடம் சாதி, மத வெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என வீண் கனவு காணாதீர் என்று கீ. வீரமணி தெரிவித்துள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி  அறிக்கை

‘கொங்கு நாடு’ என்று தனியே ஒரு மாநிலமாகப் பிரிப்பதற்கான யோசனை ‘‘கருவுற்றிருப்பதாக’’ பார்ப்பன நாளேட்டில் செய்தி!

தமிழ்நாட்டு மக்களிடையே ஜாதிவெறி - மதவெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று வீண் கனவு காணாதீர் - எச்சரிக்கிறோம்!

இது பெரியார் மண் - சூழ்ச்சிகளைத் தோலுரித்து விழிப்புணர்வு வெளிச்சத்தைக் காட்டும் பொன்னாடு தமிழ்நாடு!

‘கொங்கு நாடு’ என்று தனியே ஒரு மாநிலமாகப் பிரிப்பதற்கான யோசனை ‘‘கருவுற்றிருப்பதாக’’ பார்ப்பன நாளேட்டில் செய்தி வெளிவந்துள்ளது; தமிழ்நாட்டு மக்களிடையே ஜாதி வெறி - மதவெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்று வீண் கனவு காணாதீர் ; இது பெரியார் மண் - சூழ்ச்சிகளைத் தோலுரித்து விழிப்புணர்வு வெளிச்சத்தைக் காட்டும் பொன்னாடு - தமிழ்நாடு என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

நடைபெற்று முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் இருந்த காரணத்தால்தான் தமிழ்நாட்டில் முக்கி முனைந்து பா.ஜ.க. நான்கு தொகுதிகளில் வெற்றி பெற்றது.

கூட்டணிக் கட்சிகளின் தோள்மீது ஏறி நின்றதால்

நான்கு இடங்களில் வெற்றி!

அதுவும் அதன் சொந்த பலத்தால் அல்ல என்பதும், கூட்டணி கட்சிகளின் தோள்மீது ஏறி நின்றதால் வெற்றி பெற்றார்கள். (4 இடங்களில் இரண்டு தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள்கூட மிகமிகக் குறைவு என்பது அவர்களுக்கே தெரியும்).

இதை வைத்துக்கொண்டு, அ.தி.மு.க.வை தங்களது அடமான கட்சியாகவே இன்னமும் வைத்திருக்கும் வாய்ப்பின் காரணமாகவோ என்னவோ, ஒருவகையான புதிய விபரீத அபத்தமான யோசனையை கொங்கு நாடு என்று தனியே ஒரு மாநிலமாகப் பிரிப்பதுபற்றி ஒரு யோசனை ‘‘கருவுற்றிருக்கிறது என்பதுபோல, ஒரு பார்ப்பன நாளேட்டில் நேற்று முன்னாள் ஒரு செய்தி வந்துள்ளது! இதன் நோக்கம் பலவாக இருக்கலாம்.

திசை திருப்பும் யுக்தி!

அதை வைத்து புதிதாக விவாதப் பொருளாக அதை ஆக்கி, பிரதமர் மோடி தலைமையில் ஒன்றிய அரசின் பெட்ரோல், டீசல் விலை, சமையல் எரிவாயு விலையேற்றம் மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம், கரோனாவில் அவர்கள் கையாண்ட முறைபற்றிய விவாதங்களைத் திசை திருப்பும் உத்தியாக இது ஒரு சில நாள்களுக்குப் பயன்படட்டுமே என்ற எண்ணமாகவும் இருக்கலாம்.

தி.மு.க. ஆட்சி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் அமைந்ததோடு மாத்திரமில்லாமல், குறுகிய 60 நாள்களில் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, அகில இந்திய அளவிலும், உலக அளவிலும் அவரது ஆட்சியின் சாதனைகள், பாராட்டுகளைப் பல வட்டாரங்களில் பெறுவதையும் சகிக்க முடியாத ஆரியம் - பார்ப்பனியம் - இப்படி (தமிழ்நாட்டைப் பிரித்து கொங்கு நாடு உருவாக்கம்) ஒரு குறுக்கு யோசனையை முன்வைத்து ஆழம் பார்க்கிற மாதிரி தெரிகிறது!

முன்பு தமிழ்நாட்டில் காமராசர் ஆட்சி சிறப்பாக நடைபெற்றதை சகிக்க முடியாத ஆரியம் -  ஆச்சாரியார்மூலம் தட்சணப் பிரதேசம் என்ற ஒரு விபரீத யோசனையை முன்னெடுத்து வைத்து, காமராசர் முதலமைச்சராக இருக்கக்கூடாது என்று தடுக்க ஒரு தந்திர வியூகத்தை வரைபடம் ஆக்கி, கற்பனைத் தேரோட்டம் நடத்தின என்பதும், அது கருச்சிதைவுற்றது என்பதும் பழைய வரலாறு.

குறுக்குசால் ஓட்ட முடியுமா என்ற ‘’விஷமத்த(தா)னத்தில்’’ இறங்கியுள்ளனர்!தி.மு.க. ஆட்சியாகிய திராவிட ஆட்சி - ‘‘திராவிட மாடல் அனைவரது கவனத்தையும் ஈர்த்துப் பாராட்டைப் பெறுவதால், இனி எளிதாகத் தமிழ்நாட்டை தம் வசப்படுத்த முடியாது என்பதை உள் மனதில் உணர்ந்துவிட்டதனால், வேறு ஏதாவது குறுக்குசால் ஓட்ட முடியுமா என்ற விஷமத்த(தா)னத்தில் இறங்கியுள்ளனர்!

கொங்கு மண்டலம் என்ற பகுதியில் அ.தி.மு.க. கூட்டணியில் ஓரளவு இடங்கள் சட்டமன்றத்தில் கிடைத்துள்ளன! அதனால், அதை வைத்து தி.மு.க.வைத் தடுத்துவிடலாம், பா.ஜ.க.வை எப்படியாவது அங்கே இடம் பிடிக்க வைக்கலாம் என்ற ஒரு அதீத கற்பனையில் ஈடுபட்டு, இப்படி ஆழம் பார்க்க முனைகிறார்கள் என்பது புரிகிறது.

கொங்கு பகுதி எந்தக் கட்சிக்கும்ஏகபோகமாகி விடவில்லை!சிலரது விருப்பப்படி, கொங்கு பகுதி ஒன்றும் எந்த ஜாதியினருக்கும், எந்தக் கட்சிக்கும் ஏகபோகமாகி விடவில்லை. 2019 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளை மறந்துவிட்டீர்களா?தமிழ்நாடு என்பது வெறும் ஒரு மாநிலத்தின் பெயர் அல்ல; அதன் பின்னணியில் உள்ள மொழி, பண்பாடு, உரிமைகள், திராவிட நீரோட்டம் இவை மணல் வீடல்ல; கற்கோட்டைகள்! இந்த விஷம வித்தைகள், வியூகங்களில் இங்கே ஈடுபட்டால், ஈடுபடுவோருக்கு மக்கள் தக்க பதிலடியை உரிய நேரத்தில் தரத் தயங்கமாட்டார்கள் அங்குள்ள மக்கள்.

வீண் கனவு காணாதீர் என்று எச்சரிக்கிறோம்!

தேவையின்றி தமிழ்நாட்டு மக்களிடையே ஜாதிவெறியை, மதவெறியைத் தூண்டி வெற்றி பெறலாம் என்ற வீண் கனவு காணாதீர் என்று எச்சரிக்கிறோம்.இது பெரியார் மண் - சூழ்ச்சிகளை, சூதர்களை, அரசியல் சூதாடிகளை அடையாளங்கண்டு தோலுரித்துக் காட்டி, விழிப்புணர்வு வெளிச்சத்தை எப்போதும் காட்டும் திராவிடப் பொன்னாடு தமிழ்நாடு என்பதை, உணர்த்த ஒருபோதும் தயங்காது.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories:

>