திருச்சுழி அருகே ஆபத்தான ஆழ்கிணற்றால் விபத்து அபாயம்-தடுப்புச்சுவர் அமைக்க கோரிக்கை

திருச்சுழி : திருச்சுழி அருகே உள்ள ராஜகோபலாபுரம் கிராமத்தின் மையப்பகுதியில் உள்ள ஆபத்தான ஆழ்கிணற்றால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.

திருச்சுழி அருகே உள்ள ராஜகோபலாபுரம் கிராமத்தில் 1200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. இக்கிராமத்தின் மையப்பகுதியில் பயன்பாடின்றி பாழடைந்து புதர் மண்டிய நிலையில் கிணறு உள்ளது. கிணற்றுக்கு சுற்றுச்சுவரும் உயரம் குறைவாக உள்ளது. இந்த கிணற்றை ஒட்டிய சாலையில் தான் மக்கள் சென்று வருகின்றனர். குறிப்பாக இக்கிராமத்தில் சிறுவர்கள், ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகள் இச்சாலையில் செல்லும்போது விபத்து அபாயம் உள்ளது.

இதுகுறித்து கிராம மக்கள் கூறுகையில், இந்த கிணறு பல ஆண்டுகளாக பாழடைந்து பயனற்றுக் கிடக்கிறது. இந்த கிணற்றுக்குள் தான் எல்லா கழிவுகளும் கொட்டப்பட்டு வருகிறது. இதனால் பொறுக்க முடியாத அளவிற்கு துர்நாற்றம் ஏற்படுகிறது. எனவே, மக்களின் நலன்கருதி, கிணற்றை அகற்றவோ, அல்லது, கிணற்றை சுற்றி தடுப்புவேலி அமைக்கவோ உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.

Related Stories: