யூரோ கோப்பை கால்பந்து: இத்தாலி சாம்பியன் பட்டம் வென்றது..! பெனால்டி ஷூட் அவுட்டில் இங்கிலாந்தை வீழ்த்தியது

லண்டன்: யூரோ கோப்பை கால்பந்து தொடரில் மிகவும் பரபரப்பாக நடந்த பைனலில் இங்கிலாந்து அணியை பெனால்டி ஷூட் அவுட்டில் வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை இத்தாலி வென்றது.  இத்தாலியின் இந்த சாதனை வெற்றியை, அந்நாட்டில் இரவு முழுவதும் சாலையில் திரண்டு, ரசிகர்கள் விடிய விடிய கொண்டாடினர்.  

யூரோ கோப்பை 2020 கால்பந்து போட்டிகள், கொரோனா காரணமாக கிட்டத்தட்ட ஓராண்டு தாமதமாக, கடந்த மாதம் 11ம் தேதி துவங்கின. இந்த திருவிழாவில் 24 நாடுகளை சேர்ந்த அணிகள்  பங்கேற்றன. குரூப் ஏ முதல் குரூப் எஃப் வரை 6 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒரு பிரிவில் 4 அணிகள் இடம் பெற்றிருந்தன.  

லண்டன் (இங்கிலாந்து), செவில்லே(ஸ்பெயின்), கிளாஸ்கோ(ஸ்காட்லாந்து), கோபன்ஹெகன் (டென்மார்க்), புடாபெஸ்ட்(ஹங்கேரி), ஆம்ஸ்டர்டாம்(நெதர்லாந்து), புகாரெஸ்ட்(ருமேனியா), ரோம்(இத்தாலி), முனிச்(ஜெர்மன்), பாகு(அஜர்பைஜான்) மற்றும் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்(ரஷ்யா) ஆகிய நகரங்களில் உள்ள புகழ் பெற்ற மைதானங்களில், இப்போட்டிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வந்தன.

குரூப் வாரியாக முதல் சுற்றுப் போட்டிகள் நடந்தன. ஒவ்வொரு குரூப்பிலும் முதல் 2 இடங்களை பிடித்த அணிகளும், 3வது இடத்தை பிடித்த அணிகளில் சிறந்ததாக தேர்வு செய்யப்பட்ட 4 அணிகளும் என 16 அணிகள், அடுத்த நாக் அவுட் சுற்றுக்கு தகுதி பெற்றன.  ஸ்விட்சர்லாந்து, ஸ்பெயின், பெல்ஜியம், இத்தாலி, செக்.குடியரசு, டென்மார்க், உக்ரைன் மற்றும் இங்கிலாந்து ஆகிய 8 நாடுகள் நாக்அவுட் சுற்றில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறின. காலிறுதியில் இத்தாலி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் டென்மார்க் ஆகிய நாடுகள் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறின. அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகள் லண்டன் விம்ப்ளே மைதானத்தில் நடந்தன. அனல் பறக்க நடந்த முதல் அரையிறுதிப் போட்டியில் பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலி 4-2 என்ற கோல் கணக்கில் ஸ்பெயினை வீழ்த்தியது. மற்றொரு அரையிறுதிப் போட்டியில் டென்மார்க்கை தட்டுத்தடுமாறி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி இங்கிலாந்து, ஒரு வழியாக பைனலுக்கு தகுதி பெற்றது. இந்திய நேரப்படி இன்று அதிகாலை 12.30 மணிக்கு இறுதிப்போட்டி துவங்கியது.

ஆட்டம் துவங்கிய 2வது நிமிடத்திலேயே இங்கிலாந்தின் ரைட் மிட்ஃபீல்டர் ஒரு கிராஸ் ஷாட் மூலம் பெனால்டி ஏரியாவுக்குள் பந்தை அற்புதமாக பாஸ் செய்தார். மற்றொரு மிட்ஃபீல்டரான லூக் ஷா மின்னலாக பாய்ந்து வந்து, அந்த பந்தை கோல் போஸ்ட்டுக்குள் தள்ளி விட்டார். இந்த கோல் மூலம் இங்கிலாந்து 1-0 என முன்னிலை பெற்றது. 2ம் பாதியில் ஆட்டத்தின் 67வது நிமிடத்தில் இத்தாலியின் ஃபார்வர்ட் லியனார்டோ போனுச்சி, ஒரு கோல் அடித்தார். 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இரு அணிகளும் இருந்ததால், கூடுதல் நேரம் வழங்கப்பட்டது. கூடுதல் நேரத்தில் இரு அணிகளும் கோல் ஏதும் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட்அவுட் வழங்கப்பட்டது. பெனால்டி ஷூட்அவுட்டில் முதல் வாய்ப்பில் இரு அணிகளின் வீரர்களும் கோல் அடித்தனர். 2வது வாய்ப்பில் இத்தாலியின் ஆண்ட்ரியா பெலோட்டி அடித்த ஷாட்டை, இங்கிலாந்தின் கோல் கீப்பர் பிக்ஃபோர்ட் தடுத்து விட்டார்.

இங்கிலாந்தின் மார்கோ வெராட்டி கோல் அடிக்க, முதலில் இங்கிலாந்து முன்னிலை பெற்றது. 3வது வாய்ப்பில் இத்தாலி வீரர் போனுசி, கோல் அடித்தார். அடுத்து இங்கிலாந்தின் மார்கஸ் ராஷ்போர்ட் கோல் அடிக்க தவறினார். இத்தாலி வீரர் ஃபெட்ரிகோ கோல் அடிக்க, இங்கிலாந்தின் ஜேடன் சான்ச்சோ ஏமாற்றினார். கடைசி வாய்ப்பில் இத்தாலியின் ஜோர்கின்ஹோவும் கோல் அடிக்கவில்லை. இங்கிலாந்தின் புகாயோ சாகாவும் கோல் அடிக்கவில்லை. இதையடுத்து பெனால்டி ஷூட் அவுட்டில் இத்தாலி 3-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்தை வீழ்த்தி யூரோ கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை இத்தாலியில் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் வீதிக்கு வந்து, நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய கொண்டாடி தீர்த்தனர். கடந்த 1966ம் ஆண்டுக்கு பின்னர் இங்கிலாந்து அணி, சர்வதேச கால்பந்தில் பட்டம் வென்றதில்லை. இந்த முறையும் கை நழுவிய வெற்றியால், இங்கிலாந்து ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்தனர்.

Related Stories:

More
>