ஆற்காடு அருகே வீட்டில் ‘மினி பார்’ 164 மதுபாட்டில்கள் பறிமுதல்-வருவாய் துறையினர் அதிரடி

ஆற்காடு : ஆற்காடு அருகே வீட்டில் பதுக்கிய 164 மதுபாட்டில்களை பறிமுதல் செய்து, சம்பந்தப்பட்டவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு தோப்புக்கானா பகுதியில் உள்ள ஒரு வீட்டில் டாஸ்மாக் மதுபானங்களை பதுக்கி வைத்து ‘மினி பார்’ போன்று நடத்துவதாக வருவாய்த்துறையினருக்கு நேற்று முன்தினம் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கலால் துணை ஆணையர் சத்யபிரசாத் தலைமையில் தாசில்தார் காமாட்சி, விஏஓ மஞ்சுநாதன், ஆற்காடு டவுன் எஸ்ஐ மகாராஜன் ஆகியோர் அங்கு சென்று சோதனை செய்தனர்.

அப்போது பீர், பிராந்தி, விஸ்கி என அட்டை பெட்டிகளில் 164 மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரிந்தது. அதிகாரிகளை பார்த்தவுடன் அங்கிருந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர்.

பின்னர் அதிகாரிகள் சோதனை செய்தபோது அட்டை பெட்டிகளில் பிராந்தி, விஸ்கி பாட்டில்களும், தனியறையில் இருந்த பெரிய பிரிட்ஜ் முழுவதும் பீர் பாட்டில்களும் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது.

‘மினிபார்’ போன்று இருந்ததால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். இவற்றை டாஸ்மாக் கடைகள் விடுமுறை நாட்கள் மற்றும் நள்ளிரவு நேரங்களில் அதிக விலைக்கு விற்று வந்தது தெரியவந்தது. இதையடுத்து மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ₹30 ஆயிரம் எனக்கூறப்படுகிறது. பின்னர் மது பாட்டில்களை ஆற்காடு டவுன் போலீசில் ஒப்படைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து தப்பியோடிவர்களை தேடி வருகின்றனர்.

Related Stories:

More
>