கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும் : அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி எச்சரிக்கை

கிருஷ்ணகிரி : கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும் என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். தமிழகத்தை இரண்டு மாநிலமாக பிரித்து கொங்கு மண்டலத்தை உள்ளடக்கியதை கொங்கு நாடு என்ற பெயரில் தனி யூனியன் பிரதேசமாக மாற்றும் நடவடிக்கைகளில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் வெளிப்பாடாகவே, சமீபத்தில் மத்திய இணை அமைச்சராக பதவியேற்ற முருகனை பற்றிய குறிப்புகளில், கொங்கு நாடு என்ற வார்த்தை இடம் பெற்றதாகவும், மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில் கொங்குநாடு என்பது விஷமத்தனமான சிந்தனை என்று அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொங்கு நாடு சர்ச்சையில் அதிமுகவின் நிலைப்பாடு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதில் அளித்த அவர், கொங்குநாடு என்ற பிரிவினை வந்தால் தமிழ்நாட்டில் அமைதி பாதிக்கும்.கொங்குநாடு என்ற சிந்தனை நாட்டிற்கு நல்ல தல்ல.சென்னை முதல் கன்னியாகுமரி வரை தமிழர்கள் என்ற உணர்வுடன் அனைவரும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்றனர்; கொங்குநாடு என்ற பிரிவினை விதையை விதைக்க வேண்டாம்

யாரையோ சிறுமைப்படுத்த வேண்டும் என்பதற்காக பாஜகவினர் கொங்குநாடு என்று கூறி இருக்கிறார்கள்.கொங்குநாடு என்ற கருத்தை யார் முன்னிறுத்தி இருந்தாலும் அவர்கள் அதனை தவிர்க்க வேண்டும்.அறிவியல் உலகத்தில் இன்று உலகமே கைக்குள் வந்துவிட்டது.பாதுகாப்பு, வளர்ச்சி ஆகியவை சிறப்பாக இருக்க நாடு பலமாக இருக்க வேண்டும்.சிறு, சிறு மாநிலங்களாக இருக்கும் போது, நாட்டின் பலம் குறையும். தனிநபர் கொடுக்கும் கருத்திற்கு நாம் முக்கியத்துவம் தர தேவையில்லை,என்றார்.

Related Stories:

>