பள்ளிகொண்டாவில் சமூக விரோதிகளின் பிடியில் அங்கன்வாடி மையம்-நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

வேலூர் : பள்ளிகொண்டாவில் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும், சமூக விரோதிகளின் பிடியிலும் அங்கன்வாடி மையமும், விளையாட்டு மனமகிழ் மன்றமும் சிக்கியுள்ளதை மீட்டெடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.பள்ளிகொண்டா யாதவர் வீதியில் இளைஞர் விளையாட்டு மனமகிழ் மன்றம் அமைந்துள்ளது. இங்கு அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் வாலிபால், கால்பந்து, கபாடி என பல்வேறு விளையாட்டு பயிற்சிகளையும், உடற்பயிற்சியையும் மேற்கொண்டு வருகின்றனர்.

அதேபோல் அதன் அருகில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் பராமரிக்கப்படும் அங்கன்வாடி மையமும் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தை சுற்றியுள்ள அரசுக்கு சொந்தமான இடம் அங்குள்ள தனிநபர் ஒருவரால் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அத்துடன் மாலை தொடங்கி நள்ளிரவு வரை அங்கன்வாடி மைய வளாகத்தையும், இளைஞர் விளையாட்டு மனமகிழ் மன்ற வளாகத்தையும் குடிமகன்கள் திறந்தவெளி பாராக மாற்றுவதுடன், மதுஅருந்திய பின்னர் காலி பாட்டில்களை வீசி உடைப்பதுடன், அந்த வழியாக செல்லும் பெண்களை ஆபாசமாக அருவறுக்கத்தக்க வார்த்தைகளால் பேசுவதும் தொடர்ந்து வருகிறது.

இதுதொடர்பாக காவல்துறை, பேரூராட்சி நிர்வாகம் என பல தரப்பினருக்கும் தகவல் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் அங்கு சமூக விரோதிகளால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதற்கு முன்பு அங்கன்வாடி மைய ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சமூக விரோதிகளின் அட்டகாசத்துக்கு முடிவு கட்டவும் காவல்துறையும், பேரூராட்சி நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று யாதவர் வீதி பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

More