×

கொரோனா ஊரடங்கில் தளர்வு எதிரொலி!: தமிழ்நாடு - புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியது...பொதுமக்கள் மகிழ்ச்சி..!!

புதுச்சேரி: கொரோனா ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டதை அடுத்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையே 70 நாட்களுக்கு பிறகு பேருந்து சேவை தொடங்கியுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக கடந்த ஏப்ரல் மாதம் முதல் தமிழ்நாடு முழுவதும் பேருந்து சேவை நிறுத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமலுக்கு வந்ததை அடுத்து தமிழ்நாடு - புதுச்சேரி இடையிலான போக்குவரத்தை இன்று முதல் தொடங்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடலூர் மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து புதுச்சேரிக்கு அரசு மற்றும் தனியார் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

அரசின் நோய் தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி பயணிகள் முகக்கவசம் அணிந்து பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து 2 மாதங்களுக்கு பிறகு தமிழ்நாட்டிற்கு பேருந்துகள் இயக்கம் தொடங்கியது. அதன்படி இன்று முதல் சென்னை, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் உள்ளிட்ட மார்க்கங்களில் இருந்து தமிழகத்திற்கு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகள் அனைவரும் முகக்கவசம் கட்டாயம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பேருந்துகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே ஏற்ற அனுமதிக்க வேண்டும் என்று ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்பின் பயணிகள் ஒருவர் பின் ஒருவராக அமரவைக்கப்பட்டுள்ளனர்.


Tags : Corona ,Tamil Nadu ,Vadachcheri , Tamil Nadu - Pondicherry, bus service
× RELATED தமிழ்நாட்டில் கருவுற்ற பெண்கள்...