×

கேரள பெண் பலாத்காரம் பழநி போலீஸ் விசாரணை

பழநி: கேரள பெண் பலாத்கார புகார் விவகாரம் தொடர்பாக பழநி போலீசார் முதற்கட்ட விசாரணையை துவக்கி உள்ளனர். கேரள மாநிலம், கண்ணூரைச் சேர்ந்த 45 வயது பெண் கடந்த மாதம் 19ம் தேதி கணவருடன் திண்டுக்கல் மாவட்டம், பழநி வந்துள்ளார். அடிவாரம், பூங்கா ரோட்டில் உள்ள லாட்ஜில் தங்கி உள்ளார். இந்நிலையில், ஊர் திரும்பிய அப்பெண் பழநியில் தன்னை 3 பேர் கடத்திச் சென்று லாட்ஜில் வைத்து பலாத்காரம் செய்ததாகவும், இதுதொடர்பாக போலீசில் புகார் தெரிவித்தபோது நடவடிக்கை எடுக்கவில்லையென்றும் தெரிவித்திருந்தார். இச்சம்பவம் கேரள மாநிலத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இச்சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் திண்டுக்கல் ஏடிஎஸ்பி தலைமையிலான போலீசார் அடிவாரத்தில் உள்ள லாட்ஜில் விசாரணை நடத்தினர். ஊரடங்கு நேரத்தில், அந்தப் பெண் பழநி வந்ததன் காரணம் குறித்த தகவல்களை திரட்டினர்.

இந்நிலையில் பழநி போலீசார் தங்களது முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் செல்போன் எண், அவருடன் வந்த நபரின் செல்போன் எண், அன்றைய தினம் அப்பெண்ணின் செல்போனிற்கு வந்த அழைப்புகளின் விவரங்களை பெற்று விசாரணையை துவக்கினர். பழநி போலீஸ் தரப்பில் கூறுகையில், ‘‘கடந்த மாதம் 19ம் தேதி பழநி வந்த தம்பதி லாட்ஜில் அறை எடுத்து தங்கி மது அருந்தி உள்ளனர்.  இருவரும் மது போதையில் சண்டை போட்டுள்ளனர். சத்தம் கேட்டு சென்ற லாட்ஜ் ஊழியர்கள், இருவரையும் லாட்ஜை விட்டு வெளியே அனுப்பி உள்ளனர். அதன்பின், அப்பெண்ணின் உடன் வந்த நபர் மதுபோதையில் பழநி நகரில் சுற்றுத்திரிந்துள்ளார். ஊரடங்கு ரோந்து பணியில் இருந்த போலீசார் அந்நபரிடம் விசாரணை நடத்தினர்.

போதையில் உடன் வந்த பெண்ணை காணவில்லை, செல்போனை காணவில்லை என மாற்றி, மாற்றி பேசியுள்ளார். இதனால் போலீசார் அந்நபரை எச்சரித்து அனுப்பினர். காவல்நிலையத்திற்கு அந்த பெண் வரவில்லையென அன்றைய தினம் காவல்நிலையத்தில் பணியில் இருந்த போலீசார் தெரிவித்துள்ளனர். இதனைத்தொடர்ந்து சிசிடிவி பதிவு மற்றும் செல்போன் அழைப்புகளை அடிப்படையாகக் கொண்டு முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளோம்’’ என்றனர்.

Tags : Kerala , Female rape, Palani police, investigation
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...