×

மகா விகாஸ் கூட்டணியில் ஒருமித்த முடிவு காங்கிரசுக்குதான் சபாநாயகர் பதவி: தேசியவாத காங். தலைவர் சரத்பவார் திட்டவட்டம்

மும்பை:காலியாக இருக்கும் மகாராஷ்டிரா சட்டப்பேரவையின் புதிய சபாநாயகராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரே தேர்ந்தெடுக்கப்படுவார் என்று தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார். புதிய சபாநாயகர் விஷயத்தில் காங்கிரஸ் கட்சி எடுக்கும் முடிவை மாநிலத்தை ஆளும் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியை சேர்ந்த இதர கட்சிகளான சிவசேனாவும், தேசியவாத காங்கிரசும் ஆதரிக்கும் என்றும் அவர் கூறினார். கடந்த 2019ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் சிவசேனா பாஜ கூட்டணி வெற்றி பெற்றது. ஆனால், முதல்வர் பதவியை பாஜ விட்டுத்தராததால், இந்த கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து 2019ம் ஆண்டு நவம்பர் மாதம் 26ம் தேதி சிவசேனா, காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியை அமைத்து ஆட்சியை பிடித்தன. சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவி ஏற்றார்.

கூட்டணி ஒப்பந்தப்படி சபாநாயகர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு வழங்கப்பட்டது. இதனை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நானா படோலே சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடந்த பிப்ரவரி மாதம் மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தலைவர் பொறுப்பை ஏற்பதற்காக நானா படோலே சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்தார்.  அந்த பதவி இன்னமும் காலியாகவே இருக்கிறது. புதிய சபாநாயகர் மகாராஷ்டிரா விகாஸ் அகாடி கூட்டணியில் உள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் மற்றும் சிவசேனா ஆகிய மூன்று கட்சிகளில் எந்த கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்ற கேள்வி அரசியல் வட்டாரங்களில் பரபரப்பாக பேசப்பட்டது.

இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக புதிய சபாநாயகர் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவராக இருப்பார் என்றும் இது தொடர்பாக கூட்டணி கட்சி தலைவர்கள் பேசி முடிவு எடுத்துவிட்டனர் என்றும் சரத் பவார் தெரிவித்தார். சபாநாயகர் விஷயத்தில் காங்கிரஸ் எடுக்கும் முடிவுக்கு மற்ற கூட்டணி கட்சிகள் ஆதரவளிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags : Maha Vikas Alliance ,Congress , Maha Vikas Alliance, Congress, Speaker post, Nationalist Cong. Chairman
× RELATED புதுச்சேரியில் வாக்குப்பதிவு...