×

நீண்ட இழுபறிக்கு பிறகு புதுவை அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கீடு: நமச்சிவாயத்துக்கு உள்துறை

புதுச்சேரி: புதுச்சேரியில் நீண்ட இழுபறிக்கு பிறகு நேற்று காலை கவர்னர் தமிழிசையை சந்தித்து முதல்வர் ரங்கசாமி அமைச்சர்களுக்கான இலாகா பட்டியலை வழங்கினார். தொடர்ந்து, மாலை அரசிதழில் அமைச்சர்கள் இலாகா பட்டியல் வெளியானது.  புதுச்சேரி சட்டமன்ற தேர்தலில் என்ஆர்.காங்கிரஸ், பாஜக இடம்பெற்ற தேஜ கூட்டணி ஆட்சியை கைப்பற்றியது. தொடர்ந்து, என்ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி, கடந்த மே 7ம் தேதி முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். 50 நாட்களுக்கு பிறகு கடந்த ஜூன் 27ம் தேதி என்ஆர்.காங்கிரசை சேர்ந்த லட்சுமிநாராயணன், தேனீ.ஜெயக்குமார், சந்திரபிரியங்கா, பாஜகவை சேர்ந்த நமச்சிவாயம், சாய் ஜெ சரவணன்குமார் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றனர். எனினும் துறைகளை பிரிப்பதில் உடன்பாடு ஏற்படாததால் இழுபறி ஏற்பட்டது. பதவியேற்று 2 வாரங்களுக்கு மேலாகியும், இலாகா ஒதுக்கப்படாததால் துறை சார்ந்த பணிகள் மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டது.

இதனால் பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி சென்று பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை சந்தித்து புகார் கூறினர். இதையடுத்து அமைச்சர்களுக்கு இலாகா ஒதுக்கும் பணியில் ரங்கசாமி தீவிரம் காட்டினார். அதன்படி பட்டியலை நேற்று காலை கவர்னர் தமிழிசை சவுந்தரராஜனிடம் கொடுத்தார்.
அவர் சில மாற்றங்களை செய்யும்படி கூறியதால் அதை செய்து மீண்டும் கவர்னர் மாளிகை சென்று பட்டியலை அளித்தார். இதைதொடர்ந்து, அமைச்சர்களுக்கான இலாகா பட்டியல் கவர்னர் ஒப்புதலுடன் தலைமை செயலருக்கு அனுப்பப்பட்டு, அவரது ஆணையுடன் நேற்று மாலை அரசிதழில் வெளியிடப்பட்டது.

முதல்வர் ரங்கசாமி:
ரகசியகாப்பு மற்றும் கேபினட், கார்ப்பரேஷன்கள், வருவாய், கலால், பொது நிர்வாகம், சுகாதாரம் மற்றும் குடும்பநலம், இந்து அறநிலையத்துறை, வக்பு வாரியம், உள்ளாட்சி, துறைமுகம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல், நகரம் மற்றும் கிராமம் அமைப்பு துறை, செய்தி விளம்பரத்துறை மற்றும் பிற அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படாத துறைகள்.அமைச்சர் நமச்சிவாயம்: உள்துறை, மின்துறை, தொழில் மற்றும் வணிகத்துறை, கல்வித்துறை (கல்லூரி கல்வி உள்பட), விளையாட்டு மற்றும் இளைஞர் நலன், முப்படை நலத்துறை. அமைச்சர் லட்சுமி நாராயணன்: பொதுப்பணித்துறை, சுற்றுலா மற்றும் விமான போக்குவரத்து, மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை, சட்டம், தகவல் தொழில்நுட்பம், எழுதுபொருள் அச்சுத்துறை.

அமைச்சர் தேனீ ஜெயக்குமார்: வேளாண் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும் கால்நடை நலத்துறை, வனத்துறை, சமூக நலம், பிற்படுத்தப்பட்டோர் நலம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை. அமைச்சர் சந்திர பிரியங்கா:ஆதிதிராவிடர் நலம், போக்குவரத்து, வீட்டுவசதி, தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு, கலை மற்றும் பண்பாடு, பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் துறை. அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார்: குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (டிஆர்டிஏ), சமூக மேம்பாடு, நகர அடிப்படை சேவைகள், தீயணைப்பு, சிறுபான்மையினர் நலத்துறை.

முக்கிய துறைகளை தன்வசம் வைத்துக் கொண்ட முதல்வர்
முக்கிய துறைகள் பலவற்றை தன்னிடமே முதல்வர் ரங்கசாமி வைத்துக் கொண்டார். மேலும், தனது கட்சி அமைச்சர்களிடமும் முக்கிய இலாகாக்களை ஒதுக்கி தந்துள்ளார். ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையை ஒரே அமைச்சரிடம் ஒப்படைக்கப்பட்டு வந்தது. தற்போது அது, வெவ்வேறு அமைச்சர்களுக்கு பிரித்து அளிக்கப்பட்டுள்ளது. யாரும் எதிர்பார்க்காத வகையில் கல்வித்துறையானது அமைச்சர் நமச்சிவாயத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல், அவருக்கு ஒதுக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணனிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Tags : Namasivayam , Long drag, new minister, portfolio allocation,
× RELATED சென்டாக் கட்டணம் ரத்து நீட் அல்லாத 8167...