×

சேலத்தில் புதிய நடவடிக்கை மாஸ்க் அணியாத பயணிகளுக்கு பஸ்சிலேயே கொரோனா டெஸ்ட்: காவல்துறை, மாநகராட்சி அதிகாரிகள் அதிரடி

சேலம்: சேலத்தில் அரசு டவுன் பஸ்சில் சரிவர மாஸ்க் அணியாத பயணிகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டனர்.  தமிழகத்தில் கொரோனா 2வது அலை பரவல் கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதைத்தொடர்ந்து ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே கடந்த 5ம் தேதி முதல் மாநிலம் முழுவதும் பொது போக்குவரத்துக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாவட்டத்திற்கு உள்ளேயும், வெளியேயும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், பஸ்களில் 50 சதவீத பயணிகளை மட்டுமே அனுமதிக்க வேண்டும், அனைவரும் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், போலீசார், மாநகராட்சி அதிகாரிகள் சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே சோதனை மேற்கொண்டனர். அப்போது, இளம்பிள்ளையில் இருந்து சேலம் பழைய பஸ் நிலையம் நோக்கி அரசு டவுன் பஸ் ஒன்று வந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் அருகே வந்த போது, மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் போலீசார் பஸ்சில் ஏறி ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, பஸ்சில் சமூக இடைவெளியை கடை பிடிக்காமலும், சிலர் மாஸ்க் அணியாமலும், சிலர் சரிவர மாஸ்க் போடாமலும் அமர்ந்திருந்தனர். இதனையடுத்து பஸ்சில் வந்த 50 பயணிகளுக்கு, மருத்துவ பணியாளர்கள் மூலம் பஸ்சிலேயே கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அதிகமாக பயணிகளை ஏற்றி வந்த கண்டக்டர், டிரைவரை அதிகாரிகள் எச்சரிக்கை செய்து அனுப்பினர்.

Tags : Salem Corona , Salem, New Operation, Mask, Corona Test, Police, Corporation Officers
× RELATED சேலம் கொரோனா வார்டில் அடிப்படை...