×

இந்தியா-சீனாவை போல் மாறிய அசாம் - மிசோரம் எல்லை மோதல்: ஒரே நாளில் அடுத்தடுத்து குண்டுவீச்சு

கவுகாத்தி: அசாம்  - மிசோரம் மாநில எல்லை இந்தியா - சீனா எல்லையைப் போல் மாறி உள்ளது. அசாமில் வெடிகுண்டு தாக்குதல் நடந்த நிலையில், மிசோரம் எல்லைப் பகுதியில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்த பயங்கர 2 குண்டுகள் வெடித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வடகிழக்கு மாநிலங்களான அசாம், மிசோரம் இடையே கடந்த 1955ம் ஆண்டிலிருந்தே எல்லைப் பிரச்னை நீடித்து வருகிறது. பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இதனால், அவ்வப்போது இரு மாநிலங்கள் இடையே எல்லைப் பிரச்னைகள் வெடிப்பது வாடிக்கையாக உள்ளது. சர்ச்சைக்குரிய பகுதிகளில் வசிக்கும் மக்களும் வன்முறை சம்பவங்களில் அடிக்கடி ஈடுபடுவதுண்டு. இந்த மாநிலங்களுக்கு இடையிலான எல்லை பிரச்னை, இந்தியா - சீனா எல்லை சண்டை போல் நடந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன், மிசோரமில் இருந்து சுமார் 30 பேர் 6.5 கிமீ அசாம் எல்லைக்குள் குலிசெர்ரா பகுதியில் நுழைந்ததாக கூறப்படுகிறது. இவர்கள் அங்கு குடியிருப்புகளை அமர்த்தி ஆக்கிரமிக்க முயன்றனர். அப்பகுதியில் அசாம் பொதுப்பணித்துறை சார்பில் எல்லையை ஒட்டி சாலை அமைக்கும்பணி நடக்கிறது. அப்பணியில் இருந்த அதிகாரிகளும், அசாம் போலீசாரும் இணைந்து ஆக்கிரமிப்பாளர்களை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். அவர்களை கூரான ஆயுதங்களைக் கொண்டு ஆக்கிரமிப்பாளர்கள் மிரட்டினர். பின்னர் ஒருவழியாக ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இந்த சம்பவம் அசாம்-மிசோரம் எல்லை மோதலில் புதிய பிரச்னையாக உருவெடுத்தது. நேற்று முன்தினம் குலிசெர்ரா பகுதியில் நடக்கும் எல்லையோர சாலை அமைக்கும் பணியை ஆய்வு செய்ய போலீஸ் உயர் அதிகாரிகள் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் சென்றனர். அவர்களை குறிவைத்து அதிநவீன வகை குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டது. இதில் யாருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை. ஆனாலும், மிசோரமில் இருந்து வந்து ஆக்கிரமிப்பு செய்தவர்கள் தான் இந்த குண்டிவெடிப்பை நிகழ்த்தியிருக்கலாம் என அசாம் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

இப்படிப்பட்ட நிலையில், நேற்று அதிகாலை 2.40 மற்றும் 2.43 மணிக்கு மிசோரம் எல்லை பகுதிக்குள் அடுத்தடுத்து 2 குண்டுகள் வெடித்துள்ளன. இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், இரு மாநில எல்லையோர மக்கள் மத்தியில் குண்டுவெடிப்பு சம்பவங்கள் கோபத்தை அதிகரித்துள்ளன. இந்த சம்பவங்கள் தொடர்பாக ஒன்றிய ரிசர்வ் பாதுாப்பு படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Assam ,Mizoram ,India ,China , India-China, Assam - Mizoram border, bombing
× RELATED மே.வங்கம், அசாமில் சூறைக்காற்றுக்கு 9 பேர் பலி