×

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2வது டி20 போட்டியிலும் வெஸ்ட் இண்டீஸ் வெற்றி

செயின்ட் லூசியா: ஆஸ்திரேலிய அணியுடனான 2வது டி20 போட்டியில் 56 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2-0 என முன்னிலை பெற்றது. கிராஸ் ஐலெட், டேரன் சம்மி தேசிய ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலியா முதலில் பந்துவீசியது. வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 196 ரன் குவித்தது. பிளெட்சர் 9, கிறிஸ் கேல் 13 ரன்னில் வெளியேற, சிம்மன்ஸ் 30 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஹெட்மயர் 61 ரன் (36 பந்து, 2 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். டுவைன் பிராவோ 47 ரன் (34 பந்து, 1 பவுண்டரி, 3 சிக்சர்), ஆந்த்ரே ரஸ்ஸல் 24 ரன்னுடன் (8 பந்து, 2 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

ஆஸி. பந்துவீச்சில் ஹேசல்வுட், ஏகார், மிட்செல் மார்ஷ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 20 ஓவரில் 197 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 19.2 ஓவரில் 140 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டானது. மிட்செல் மார்ஷ் அதிகபட்சமாக 54 ரன் (42 பந்து, 5 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசினார். பிலிப் 13, ஹென்ரிக்ஸ் 19 ரன் எடுக்க, மற்ற வீரர்கள் சொற்ப ரன்னில் அணிவகுத்தனர். வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சில் ஹேடன் வால்ஷ் 3, காட்ரெல் 2, எட்வர்ட்ஸ், ரஸ்ஸல், பிராவோ, கேல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். 56 ரன் வித்தியாசத்தில் வென்ற வெஸ்ட் இண்டீஸ் 2-0 என முன்னிலை பெற்றது. ஹெட்மயர் ஆட்ட நாயகன் விருது பெற்றார். 3வது போட்டி நாளை நடக்கிறது.


Tags : West Indies ,Australia , Australia, T20, Tournament, West Indies
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது