×

220 ரன் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி

ஹராரே: ஜிம்பாப்வே அணியுடன் நடந்த டெஸ்ட் போட்டியில், வங்கதேச அணி 220 ரன் வித்தியாசத்தில் அபாரமாக வென்றது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் ஜூலை 7ம் தேதி தொடங்கி நடந்து வந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த வங்கதேசம் முதல் இன்னிங்சில் 468 ரன் குவித்தது (126 ஓவர்). கேப்டன் மோமினுல் ஹக் 70, லிட்டன் தாஸ் 95, டஸ்கின் அகமது 75 ரன் விளாசினர். அபாரமாக விளையாடிய மகமதுல்லா 150 ரன்னுடன் (278 பந்து, 17 பவுண்டரி, 1 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே பந்துவீச்சில் முஸரபானி 4, திரிபானோ, விக்டர் தலா 2, ரிச்சர்ட், மில்டன் தலா 1 விக்கெட் கைப்பற்றினர்.
அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 276 ரன்னுக்கு சுருண்டது. மில்டன் 41, கெய்தானோ 87, கேப்டன் பிரெண்டன் டெய்லர் 81, மையர்ஸ் 27, சகாப்வா 31* ரன் எடுத்தனர். வங்கதேச பந்துவீச்சில் மிராஸ் 5, ஷாகிப் அல் ஹசன் 4, டஸ்கின் அகமது 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து 192 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய வங்கதேசம் ஒரு விக்கெட் இழப்புக்கு 284 ரன் குவித்து டிக்ளேர் செய்தது.

சைப் ஹசன் 43 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார். ஷத்மன் இஸ்லாம் 115 ரன் (196 பந்து, 9 பவுண்டரி), நஜ்முல் உசேன் ஷான்டோ 117 ரன்னுடன் (118 பந்து, 5 பவுண்டரி, 6 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இதைத் தொடர்ந்து, 477 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே, 4ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 140 ரன் எடுத்திருந்தது. மில்டன் 11, கேப்டன் டெய்லர் 92 ரன் (73 பந்து, 16 பவுண்டரி), கெய்தானோ 7 ரன் (102 பந்து, 1 பவுண்டரி) எடுத்து ஆட்டமிழந்தனர். மையர்ஸ் 18, திரிபானோ 7 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். மையர்ஸ் 26 ரன்னில் வெளியேற, அடுத்து வந்த மருமா, ராய் கையா இருவரும் டக் அவுட்டாகினர். சகாப்வா 1 ரன்னில் வெளியேறி ஏமாற்றமளித்தார். விக்டர் 10 ரன் எடுக்க, கடுமையாகப் போரடி அரை சதம் அடித்த திரிபானோ 52 ரன் எடுத்து (144 பந்து, 6 பவுண்டரி) ஆட்டமிழந்தார்.

ரிச்சர்ட் 10 ரன்னில் விக்கெட்டை பறிகொடுக்க, ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 256 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (94.4 ஓவர்). முஸரபானி 30 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.  வங்கதேச பந்துவீச்சில் மிராஸ், டஸ்கின் அகமது தலா 4, ஷாகிப் ஹசன், எபதாத் உசேன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். வங்கதேச அணி 220 ரன் வித்தியாசத்தில் வெற்றியை வசப்படுத்தியது. மகமதுல்லா ஆட்ட நாயகன் விருது பெற்றார். அடுத்து இரு அணிகளும் தலா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள், டி20 தொடர்களில் மோதுகின்றன. முதல் ஒருநாள் போட்டி ஹராரேவில் வரும் 16ம் தேதி நடக்கிறது.

Tags : Bangladesh , Run, Bangladesh, win
× RELATED சில்லி பாயின்ட்…