விம்பிள்டனில் ஜோகோவிச் மீண்டும் சாம்பியன்

லண்டன்: விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் 6வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற செர்பிய வீரர் நோவாக் ஜோகோவிச், தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்ற நட்சத்திர வீரர்கள் ரோஜர் பெடரர் (சுவிஸ்), ரபேல் நடால் (ஸ்பெயின்) சாதனையை சமன் செய்து அசத்தினார். விம்பிள்டன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் நடப்பு சாம்பியனும் நம்பர் 1 வீரருமான ஜோகோவிச் (34 வயது), இறுதிப் போட்டியில் இத்தாலியின் மேட்டியோ பெரட்டினியுடன் (25 வயது, 7வது ரேங்க்) நேற்று மோதினார். டை பிரேக்கர் வரை இழுபறியாக நீடித்த முதல் செட்டை பெரட்டினி 7-6 (7-4) என்ற கணக்கில் கைப்பற்றி முன்னிலை பெற்றார். எனினும், தனது அனுபவ ஆட்டத்தை வெளிப்படுத்தி இளம் வீரரை திணறடித்த ஜோகோவி அடுத்த 2 செட்களையும் 6-4, 6-4 என வென்று பதிலடி கொடுத்தார்.

மிகவும் விறுவிறுப்பாக அமைந்த இப்போட்டியில், ஜோகோவிச் 6-7 (4-7), 6-4, 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று, 6வது முறையாக விம்பிள்டன் தொடரில் சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார். மேலும், இந்த வெற்றியின் மூலம் தனது 20வது கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய அவர் பெடரர், நடாலின் சாதனையை சமன் செய்து முதலிடத்தை பகிர்ந்து கொண்டார்.  டென்னிஸ் உலகின் மும்மூர்த்திகளாக விளங்கும் இவர்கள் மூவரும் தலா 20 கிராண்ட் ஸ்லாம் பட்டங்களுடன் சமநிலை வகிப்பதால், அடுத்த வெற்றி யாருக்கு? யார் நிரந்தரமாக முதலிடத்தை பிடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு பன்மடங்காக அதிகரித்துள்ளது.

Related Stories: