பொதுப்பணித்துறை தனி அமைச்சகமாக உருவாக்கப்பட்ட நிலையில் புதிதாக திருச்சி மண்டலம் அமைக்க தரக்கட்டுப்பாட்டு கோட்டம் ஏற்படுத்த முடிவு: கூடுதல் பொறியாளர் பணியிடங்களை டிஎன்பிஎஸ்சி மூலம் நிரப்ப திட்டம்

சென்னை: பொதுப்பணித்துறை தனி அமைச்சமாக உருவாக்கப்பட்ட நிலையில் புதிதாக திருச்சி மண்டலம், தரக்கட்டுப்பாட்டு கோட்டம் ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகிறது என்று பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தமிழக பொதுப்பணித்துறையில் கட்டுமானம், நீர்வளம் ஆகிய 2 பிரிவுகள் உள்ளது. இதில், கட்டுமான பிரிவு மூலம் பல்வேறு துறைகளின் அரசு கட்டிடங்களை புனரமைப்பது, பராமரிப்பது போன்ற பணிகளும்,  நீர்வளப்பிரிவு மூலம் அணை, ஏரிகள் புனரமைத்தல், தடுப்பணை, கதவணை அமைத்தல்  உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்த நிலையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதும் தமிழகத்தில் நீராதாரத்தை பெருக்கும் வகையில் நீர்பாசனத்துறை அமைச்சகம் உருவாக்கப்பட்டு, அதன் அமைச்சராக துரைமுருகன், பொதுப்பணித்துறை அமைச்சராக எ.வ.வேலு பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து பொதுப்பணி மற்றும் நீர்வளத்துறை நிர்வாகத்தை இரண்டாக பிரிக்கும் பணி நடந்து வருகிறது. இதில், நீர்வளத்துறை வலுவான கட்டமைப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறையிலும் இது போன்ற கட்டமைப்பு அவசியமாகிறது. எனவே, பொதுப்பணித்துறையில் புதிதாக மண்டலம், கோட்டம், உபகோட்டம் உருவாக்கப்படுகிறது. தற்போது, பொதுப்பணித்துறையில் சென்னை, மதுரை, திருச்சி மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. இதில், மண்டல தலைமை பொறியாளர்களின் கீழ் பொறியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இதில், திருச்சி மண்டலம் பெரியதாக இருப்பதால், அவற்றை இரண்டாக பிரித்து புதிதாக கோவை மண்டலம் உருவாக்கப்படுகிறது.

அதே போன்று மருத்துவ கட்டுமான பிரிவில் ஒரு கண்காணிப்பு பொறியாளரின் கீழ் 10 மாவட்டங்கள் உள்ள நிலையில் கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. எனவே, ஒரு கண்காணிப்பு பொறியாளர் 5 மாவட்டங்கள் மட்டுமே கவனிக்கும் வகையில் கூடுதல் பணியிடம் ஏற்படுத்தப்படுகிறது. கட்டுமான பிரிவுக்கு, தரக்கட்டுபாட்டு பிரிவு கோட்டம் இல்லாத நிலையில், அவற்றையும் உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கோட்டத்தை திட்டம் மற்றும் வடிவமைப்பு கோட்ட கண்காணிப்பு பொறியாளரின் கீழ் கொண்டு வரப்படுகிறது. மேலும், புதிதாக கோட்டம், உபகோட்டம் ஏற்படுத்தப்படுவதால், பொறியாளர்கள் பணியிடங்கள் கூடுதலாக ஏற்படுத்த வேண்டியுள்ளது. எனவே, பொதுப்பணித்துறை நிர்வாகத்தை பிரிப்பதற்கான அரசாணை வெளியிடப்பட்டவுடன், டிஎன்பிஎஸ்சி மூலம் கூடுதல் பொறியாளர்கள் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தி நியமிக்க முடிவு செய்யப்பட்டு இருப்பதாக பொதுப்பணித்துறை அதிகரி ஒருவர் தெரிவித்தார்.

* பொதுப்பணித்துறைக்கு அதிகாரப்பூர்வ இணையதளம்

பொதுப்பணி, நீர்வளத்துறை என இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளது. எனவே, பொதுப்பணித்துறைக்கு தமிழக அரசின் அதிகாரப்பூர்வ இணையதளம் அமைக்க வேண்டியுள்ளது. இதற்காக, எல்காட் நிறுவனத்தின் அனுமதியுடன் என்ஐசி எனப்படும் தேசிய தகவல் மையம் மூலம் அதிகாரப்பூர்வ இணையதளம் உருவாக்கப்படுகிறது. இந்த இணையதளத்தில் பொதுப்பணித்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பணி விவரங்கள், அங்கீகரிக்கப்பட்ட எம்சாண்ட் குவாரிகள் விவரங்கள், அங்கீகரிக்கப்பட்ட சிமென்ட், கம்பி, டைல்ஸ், ஜல்லி, எல்க்ட்ரிக் பொருட்கள் உட்பட அனைத்து கட்டுமான பொருட்களின் விவரங்கள், அரசாணை, சுற்றறிக்கை உள்ளிட்ட அனைத்து விவரங்களும் வெளியிடப்படும்.

Related Stories:

>