திருப்பதியில் போலி விஐபி தரிசன டிக்கெட் விற்பனை: ஆயிரக்கணக்கில் கொடுத்து ஏமாறும் பக்தர்கள்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி தரிசன டிக்கெட் முறைகேட்டில் 7 இடைத்தரகர்களை போலீசார் கைது செய்தனர். இது பற்றி திருமலையில் உள்ள முதலாவது நகர காவல் நிலைய கூடுதல் எஸ்பி முனிராமைய்யா கூறியதாவது: கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு தேவஸ்தானத்தின் அதிகாரப்பூர்வ இணையதள வெப்சைட் மூலம் தரிசன டிக்கெட் வெளியிடப்படுகிறது. அந்த டிக்கெட் உள்ள பக்தர்கள் மட்டும் தரிசனத்திற்கு கொரோனா நிபந்தனைகளை கடைப்பிடித்து அனுமதிக்கப்படுகின்றனர்.  இதனை அறியாத பல பக்தர்கள் ரயில்கள், பேருந்துகள் மூலமாக திருப்பதி வருகின்றனர். அவர்களிடம் ஆட்டோ மற்றும் ஜீப் டிரைவர்கள் இடைத்தரகர்களுடன் சேர்ந்து விஐபி தரிசனம் செய்து வைப்பதாக கூறி 6 டிக்கெட்டுகளுக்கு ₹20,000 என பணம் பெற்றுக்கொண்டு மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதுதவிர போலி டிக்கெட்டுகளை தயார் செய்தும் பக்தர்களை மோசடி செய்து வருகின்றனர். இது தொடர்பாக  7 வழக்குகளில் 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்நிலையில், நேற்று முன்தினம் விஐபி தரிசனம் செய்து வைப்பதாக கூறி இருவேறு பக்தர்களிடம் ₹35 ஆயிரம் பணம் பெற்றுக்கொண்டு, போலி டிக்கெட்டுகளை வழங்கி ஏமாற்றிய 7 பேரை கைது செய்து உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

திருமண பத்திரிக்கையை அனுப்பினால் பிரசாதம்

புதிதாக திருமணம் செய்யும் தம்பதியரை ஏழுமலையான் ஆசிர்வதிக்கும் வகையில்,  திருமண பத்திரிக்கையை அனுப்பினால், புதுமண தம்பதிகள் கைகளில் கட்டிக்கொள்ள கங்கணம், மஞ்சள், குங்குமம், திருமண முக்கியத்துவத்தை சொல்லும் ஒரு புத்தகம் ஆகியவற்றை  அஞ்சல் மூலமாக தேவஸ்தானம் அனுப்பும்.கொரோனா பரவலால் இத்திட்டம் கடந்தாண்டு மார்ச்சில் நிறுத்தப்பட்டது. தற்போது, கொரோனா தொற்று குறைந்துள்ளதால் மீண்டும் இது நடைமுறைக்கு வந்துள்ளது. திருமண பத்திரிக்கைகளை, ‘Sri Lord Venkateswara swamy, The Executive Officer, TTD Administrative Building, K.T.Road, Tirupati-517 501’ என்ற முகவரிக்கு அனுப்பும்டி தேவஸ்தானம் கூறியுள்ளது.

Related Stories: