ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு உயர் நீதிமன்றத்தில் இடையீட்டு மனு தாக்கல்: எஸ்.டி.பி.ஐ.கட்சி தகவல்

சென்னை: நீட் பாதிப்பை கண்டறியும் நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிராக சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கில், தங்கள் தரப்பின் கருத்துக்களை முன்வைக்கும் வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக  இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் நீட் பாதிப்பை கண்டறியும் வகையில் நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது. இந்த நிலையில் இந்த குழுவை ரத்து செய்ய வேண்டும் என்று பாஜ சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. பாஜவின் வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் சார்பில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வருகிறது. இந்த நிலையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியும் வழக்கு தொடர்ந்துள்ளது.

இது குறித்து எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் வெளியிட்ட அறிக்கை: நீட் தேர்வினால் ஏழை மற்றும் கிராமப்புற மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பைக் கண்டறிவதற்காக தமிழக அரசு சார்பாக நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவை ரத்து செய்யக் கோரி பாஜவின் மாநில பொதுச் செயலாளர் கரு.நாகராஜன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்துள்ளார். அரசியல் காழ்ப்புணர்வு நோக்கில் தொடரப்பட்டுள்ள இந்த வழக்கில்,  நீட் தேர்வுக்கு எதிராக  தொடர்ந்து போராடி வரும் தங்கள் தரப்பின் கருத்துக்களை முன்வைக்க அனுமதி கோரி, எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பாக இடையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories: