ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் அமல் கடைகள் இன்று முதல் இரவு 9 மணி வரை செயல்படும்: தமிழகம்-புதுவை இடையே பஸ் சேவை தொடக்கம்

சென்னை: ஊரடங்கில் கூடுதல் தளர்வுகள் இன்று முதல் அமலாகிறது. இதையடுத்து கடைகள் அனைத்தும் இரவு 9 மணி வரை செயல்படும். தமிழகம்-புதுச்சேரி இடையே பஸ் சேவையும் தொடங்குகிறது. கொரோனா பெருந்தொற்று ஒன்றிய அரசால் பேரிடராக அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களில் கொரோனாவை கட்டுப்படுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்றது. தொடர்ந்து நோய்த் தொற்று பரவல் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசின் அதிரடி நடவடிக்கையால் பெரும்பான்மையான மாவட்டத்தில் கொரோனா தொற்று வெகுவாக குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து பல்வேறு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை அவ்வப்போது நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தமிழக அரசு அறிவித்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று காலை 6 மணியுடன் முடிவடைகிறது. அதே நேரத்தில் தமிழகத்தில் கொரோனாவின் பாதிப்பு மேலும் குறைந்துள்ளது. இதைத் தொடர்ந்து மாநிலத்தின் கொரோனா நோய் தொற்று நிலையைக் கண்காணித்து கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை கருத்தில் கொண்டு பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கை வருகிற 19ம் தேதி காலை 6 மணி வரை நீட்டிப்பு செய்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று முன்தினம் அறிவிப்பை வெளியிட்டார்.

அதன் அடிப்படையில் வருகிற 19ம் தேதி காலை 6 மணி வரை மாநிலங்களுக்கிடையே தனியார் மற்றும் அரசு பேருந்து போக்குவரத்து (புதுச்சேரி நீங்கலாக) தடை தொடருகிறது. திரையரங்கு, அனைத்து மதுக்கூடம், பொது மக்கள் கலந்து கொள்ளும் சமுதாயம், அரசியல் சார்ந்த கூட்டம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை தொடருகிறது. மேலும் புதுச்சேரிக்கான பேருந்து சேவை இன்று காலை முதல் தொடங்கப்படுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகளின் வேலைவாய்ப்பு தொடர்பான எழுத்துத் தேர்வுகள் நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உணவகம், டீக்கடை, பேக்கரி, நடைபாதைக் கடைகள், இனிப்பு, காரவகை பண்டங்கள் விற்பனை கடைகள் ஆகியவை இரவு 9 மணிவரை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

கடைகள் நுழைவு வாயிலில், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் கட்டாயமாக வைக்க வேண்டும். உடல் வெப்ப நிலை பரிசோதனை கருவி கொண்டு பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏசி  பயன்படுத்தப்படும் இடங்களில் கதவு, ஜன்னல்கள் திறக்கப்பட்டு காற்றோட்ட வசதியுடன் செயல்பட வேண்டும். ஒரே நேரத்தில் அதிகப்படியான நபர்களை அனுமதிக்கக்கூடாது என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த, பொது மக்கள் அவசியமின்றி வீட்டிலிருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும் என்றும் அரசு சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கொரோனா நோய்த் தொற்று மேலாண்மைக்கான விதிமுறைகள் கண்காணிக்கப்பட்டு, விதிமீறல்களில் ஈடுபடுவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரையரங்கு, மதுக்கூடம், பொதுமக்கள் பங்கேற்கும் சமுதாய,,அரசியல் சார்ந்த கூட்டம், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்க தடை தொடருகிறது.

Related Stories:

>