×

கட்சியின் முக்கிய பொறுப்பாளர்கள் 905 பேருடன் அதிமுக மாஜி அமைச்சர் திமுகவில் இணைந்தார்: முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் கூண்டோடு சேர்ந்ததால் பரபரப்பு

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம், முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று திமுகவில் இணைந்தார். ஏற்கனவே அதிமுகவில் இருந்து முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பிக்கள், எம்எல்ஏக்கள் என பலர் வரிசையாக திமுகவில் இணைந்து வருகின்றனர். இந்நிலையில், அவருடன் ஈரோடு மாவட்டத்தில் உள்ள அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்த 905 பேர் திமுகவில் இணைந்தனர். இதன் மூலம் ஈரோடு மாவட்டத்தில் அதிமுக கட்சியே கூண்டோடு கலைந்துவிட்டது. இது அதிமுக தலைமைக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் திமுக மகத்தான வெற்றியை பெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின் பல்வேறு மக்கள் நலதிட்டங்களை அறிவித்து செயல்படுத்தி வருகிறார். அவரின் அறிவிப்புகள் மக்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. அவரின் அதிரடி செயல்பாடுகள், நடவடிக்கைகளை பார்த்து பலர் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி, எம்எல்ஏக்கள், மாவட்ட செயலாளர்கள் மற்றும் கட்சியின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் பலர் தொடர்ந்து இணைந்து வருகின்றனர். இதே போல பாமக, தேமுதிக, மக்கள் நீதி மய்யம், பாஜவை சேர்ந்தவர்களும் இணைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஈரோடு தெற்கு மாவட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு  என்.டி.வெங்கடாச்சலம் தலைமையில் ஈரோடு புறநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்  செயலாளர்கள் ஏ.வி.பாலகிருஷ்ணன்- முன்னாள் எம்எல்ஏ அந்தியூர் எஸ்.ஆர்.கிருஷ்ணன், திருப்பூர் மாவட்ட துணைச் செயலாளர் வி.மணிமேகலை, மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் பெரியசாமி கவுண்டர், மாவட்ட இணை செயலாளர் பி.எஸ்.கணேசன், அம்மாப்பேட்டை யூனியன் சேர்மன் சரவணபவன், யூனியன் கவுன்சிலர்கள் ஹேமலதா சம்பத், பார்வதி ராஜ்,அப்பு சாமி, சென்னிமலை நகர கூட்டுறவு வங்கி தலைவர் விஸ்வநாதன், வெட்டையன் கிணறு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் தலைவர் சிதம்பரநாதன், நெசவாளர் வங்கி தலைவர்கள் சிதம்பரம், ஈஸ்வரமூர்த்தி, நந்தகுமார், சாந்தி கோவிந்தராஜ், கோவிந்தராஜ், ஊராட்சி மன்ற தலைவர்கள் தாமோதரன், ஈஸ்வரமூர்த்தி, பூங்கொடி பழனி, ஈரோடு மாவட்டம் முன்னாள் அரசு வழக்கறிஞர் பி.எஸ்.கணேசன், பவானி கூடுதல் அரசு வழக்கறிஞர் ஜி.குமரேசன், மாவட்ட மகளிர் அணி செயலாளர் கே.கல்பனா, விஜயலட்கூமி, அதிமுக வழக்கறிஞர் கவுரி சங்கர், ஈரோடு மாநகராட்சி வழக்கறிஞர் எம்.சுரேஷ்குமார், அமைப்பு சாரா ஓட்டுநர் மாவட்ட இணை செயலாளர் டி.மாது, அதிமுக வழக்கறிஞர்கள் பாக்கிய லட்சுமி, அசோக்குமார், கமலக்கண்ணன், வரதராஜ், மோகன், பிரகாஷ், முத்துசாமி, குமரேஷ், தம்பித்துரை உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் மற்றும் தேமுதிக, தமாகா, பாமக, அமமுக நிர்வாகிகள் திமுகவில் இணைந்தனர்.

மேலும், 25 கூட்டுறவு சங்கங்களின் தலைவர்கள், 6 பெருந்துறை ஒன்றிய கவுன்சிலர்கள், ஈரோடு மாவட்ட பிரதிநிதி, பவானி தொகுதியை சேர்ந்த 136 நிர்வாகிகள், கோபிச்செட்டிபாளையத்தை சேர்ந்த நிர்வாகிகள், பெருந்துறை தொகுதி நிர்வாகிகள் ஒன்றிய, நகர, கிளை நிர்வாகிகள் என 905 பேர்  திமுகவில் இணைந்தனர். முன்னதாக ஈரோடு, பெருந்துறை, கோபிச்செட்டி பாளையம், பவானி தொகுதிகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் என சுமார் 2,000 பேர் அண்ணா அறிவாலயம் வந்தனர். இது கொரோனா காலம் என்பதால் கூட்டம் சேர்க்கக்கூடாது என்ற விதி உள்ளது. இதனால், இந்த விதியை பின்பற்றி நிர்வாகிகள் மட்டும் மு.க.ஸ்டாலினை சந்தித்து கட்சியில் இணைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திமுகவில் இணைந்தவர்களில் பெரும்பாலானவர்கள் முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன், கே.சி.கருப்பணன் ஆதரவாளர்கள் ஆவர்.

ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த அதிமுக நிர்வாகிகள் பலர் கூண்டோடு திமுகவில் இணைந்துள்ளது அதிமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக சட்டப்பேரவை தேர்தலில் கொங்கு மண்டலம் தான் அதிமுகவுக்கு கைகொடுத்தது. தற்போது அங்குள்ளவர்கள் கூண்டோடு விலகி திமுகவில் இணைந்துள்ளது, அதிமுக கட்சி தலைமைக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. முன்னதாக, தோப்பு வெங்கடாச்சலம், திமுக அரசின் சாதனைகளை விளக்கும் வகையில் வடிவமைத்துள்ள பிரசார வாகனத்தை மு.க.ஸ்டாலின் நேரில் பார்வையிட்டார். இந்த பிரசார வாகனம் ஈரோடு மாவட்டம் முழுவதும் திமுக அரசின் சாதனைகள் குறித்து மக்களிடம் விளக்கும் வகையில் பயன்படுத்தப்பட உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

நிகழ்ச்சியின் போது திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர்  டி.ஆர்.பாலு, துணைப் பொதுச்செயலாளர்கள் ஆ.இராசா, அந்தியூர் ப.செல்வராஜ், அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளர் எஸ்.முத்துசாமி ஆகியோர் உடனிருந்தனர். கட்சியில் இணைந்த தோப்பு வெங்கடாச்சலம் பெருந்துறை தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு 2 முறை வெற்றி பெற்றவர். ஜெயலலிதா தலைமையிலான அமைச்சரவையில் வருவாய்துறை அமைச்சர், சுற்றுச்சூழல் துறை அமைச்சர் போன்ற பதவிகளை வகித்தார். கடந்த சட்டப்பேரவை தேர்தலில் அவருக்கு சீட் கொடுக்கப்படவில்லை. இதனால், தோப்பு வெங்கடாச்சலம் சுயேட்சையாக போட்டியிட்டு தோல்வியுற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

* முதல்வர் முன்னிலையில் திமுகவில் இணையும் முக்கிய நபர்களில் தோப்பு வெங்கடாசலமும் ஒருவர்.
* 2011ம் ஆண்டில் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சராக நியமிக்கப்பட்டார்.
* திமுகவில் இணைந்த அதிமுக நிர்வாகிகள் எண்ணிக்கை 905.
* திமுகவில் இணைய வந்த அதிமுக தொண்டர்கள் 2000க்கும் மேல்.

Tags : AIADMK ,DMK , AIADMK ex-minister joins DMK with 905 key party functionaries: Chief Minister MK Stalin joins Erode district administration
× RELATED திமுக எம்எல்ஏ, அதிமுக மாவட்ட செயலாளர்...