×

நாட்டிலேயே கல்வியறிவில் முன்னோடியாக விளங்கியும் வரதட்சணை எனும் சமூகநோயில் சிக்கியுள்ள கேரளா: இளம்பெண்களின் அடுத்தடுத்த மரணத்தால் சோகம்..!

திருவனந்தபுரம்: நாட்டிலேயே கல்வியறிவில் முன்னோடியாக விளங்கும் கேரளாவில், வரதட்சணை எனும் சமூக நோயால் இளம்பெண்கள் மரணிப்பது அதிகரித்து வருவது பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தி உள்ளது. இந்தியாவின் கல்வி மற்றும் சமூக நுகர்வு குறித்த 2017 ஜூலை முதல் 2018 ஜூன் வரையிலான தேசிய மாதிரி சர்வேயின் 75வது சுற்று கள ஆய்வு அறிக்கையை தேசிய புள்ளியியல் அலுவலகம் கடந்தாண்டு செப்டம்பரில் வெளியிட்டுள்து. இந்த சாம்பிள் சர்வே நாடு முழுவதும் 8,097 கிராமங்களில் உள்ள 64,519 வீடுகளிலும், 6,188 மண்டலங்களில் உள்ள 49,238 வீடுகளிலும் நடத்தப்பட்டது. இதில் மாநில வாரியாக கல்வி கற்றவர்கள் குறித்த விகிதம், 7 வயதுக்கு மேல் கல்வி கற்றவர்கள் என கல்வி தொடர்பாக ஆய்வுகளை நடத்தி வெளியிட்டுள்ளது. அதன்படி, நாட்டிலேயே அதிகமான கல்வியறிவு பெற்றவர்கள் உள்ள மாநிலமாக கேரளா தொடர்ந்து முதலிடத்தில் இருக்கிறது. கேரளாவில் கிராமப்புறங்களில் 95.4 சதவீதம் பேரும், நகர்புறங்களில் 96.4 சதவீதம் பேரும் ஒட்டுமொத்தமாக 96.2 சவீதம் பேர் கல்வியறிவு பெற்றவர்களாக இருக்கிறார்கள்.

இதில் நாடுமுழுவதும் ஆண்களில் கல்வியறிவு பெற்றவர்கள் 84.7 சதவீதம் பேரும், பெண்கள் 70.3 சதவீதம் பேரும் உள்ளனர். நாடுமுழுவதும் பெண்களில் கல்வியறிவு பெற்றவர்களைவிட ஆண்கள் கல்வி்யறவு பெற்றவர்கள்தான் அதிகமாக உள்ளது. கேரளாவில் ஆண்களில் 97.4 சதவீதம்பேர் கல்வியறவு பெற்றவர்களும், பெண்களில் 95.2 சதவீதம் பேர் கல்வியறவு பெற்றவர்களும் உள்ளனர். இவ்வாறாக, கல்வியறிவில் நாட்டிற்கே முன்னோடியாக இருக்கும் கேரளாவில், சமீபத்திய சமூக கொடுமைகள் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டது. குறிப்பாக வரதட்சணை என்ற பெயரில் சமீபத்தில் நடந்த இளம்பெண்களின் மரணங்கள், கேரளாவில் நடக்கும் சமூக சீரழிவை அம்பலப்படுத்தியுள்ளது. மாநில வளர்ச்சி மற்றும் அறிவுசார் திறன்களின் முன்னணியில் இருப்பதாக கூறப்பட்டாலும், வரதட்சணை எனும் சமூக நோயில் சிக்கி பெண்கள் மரணிப்பது பெரும் கவலையை ஏற்படுத்தி உள்ளது.

சுமார் அறுபது ஆண்டுகளுக்கு முன்பே, வரதட்சணை தடைச் சட்டத்தை நடைமுறைக்கு வந்த கேரளாவில், கொடூரமான வரதட்சணை எனும் தீய நடைமுறை பழக்கங்கள் இன்று வெளிப்படையாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில், இந்திரா ராஜன் என்பவர் கேரள உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை தாக்கல் செய்தார். அதில், ‘திருமண நேரத்தில் மணமகனுக்கு வழங்கப்பட்ட பரிசு பொருட்களின் பட்டியலை திருமண பதிவேட்டில் சேர்க்க வேண்டும். வரதட்சணையால் பாதிக்கப்பட்ட பெண் இறந்தால், அதற்கு பொறுப்பானவர்கள் இழப்பீடு வழங்கப்பட வேண்டும்’ என்று தெரிவித்தார். இம்மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட அம்மாநில உயர்நீதிமன்றம், ‘கடந்த 2004ம் ஆண்டு முதல் கேரளாவில் வரதட்சணை தடைச் சட்டத்தின் கீழ் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் தெரிவிக்க மாநில அரசு வேண்டும். கடந்த 2004ம் ஆண்டின் வரதட்சணை தடைச் சட்டத்தின்படி வரதட்சணை தடுப்பு அதிகாரி மற்றும் ஆலோசனைக் குழுவை நியமிக்க வேண்டும். எனினும், அவ்வாறு செய்யப்படவில்லை. எனவே, உள்ளூர் மட்டத்தில் வரதட்சணை தடுப்பு அதிகாரியை நியமிக்காததற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும்.

அதிகாரியை நியமிக்காமல் இருந்தது, மிகவும் துரதிர்ஷ்டவசமான நிகழ்வாக நீதிமன்றம் பார்க்கிறது’ என்று தெரிவித்துள்ளது. உண்மை என்னவென்றால், மாநில அளவில் மகளிர் ஆணையம் செயல்பட்டு வந்தாலும்,  அவர்கள் செயலற்றவர்களாக உள்ளனர். சமீபத்தில் மகளிர் ஆணையத் தலைவிக்கு எதிராக எழுந்த குற்றச்சாட்டால், அவர் தனது பதவியை விலக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டார். சமூக முன்னேற்றம், முற்போக்கான இயக்கங்கள், பகுத்தறிவு சிந்தனை கொண்ட கேரள மண்ணில், வரதட்சணை என்ற சமூக வர்த்தகம் எப்படி செழித்து வளர்கிறது? என்பதையும் ஆழமாக ஆராய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இன்றைய நவீன உலகில் கேரள பெண்களை வர்த்தக பொருளாக மாற்றியதை பலரும் பேச தயங்குகின்றனர். இதுகுறித்து, கேரள முற்போக்கு அமைப்புகளின் பிரதிநிதிகள் கூறுகையில், ‘திருமண தாமதம் போன்ற காரணங்கள், படித்த படிப்புக்கு ஏற்றவாறு தங்கம், வெள்ளி போன்ற ஆபரணங்களை வரதட்சணையாக அளிக்கின்றனர்.

வரதட்சணை வேண்டாம் என்று பெற்றோர் சொன்னால்தான், இந்த வரதட்சணை வர்த்தகத்தை தடுத்து நிறுத்த முடியும். வரதட்சணை கோருபவர்களை கேள்வி எழுப்பவும், அவர்களை சட்டத்தின் முன் கொண்டு வந்து சமூகத்திற்கு அம்பலப்படுத்தவும் இளைஞர்கள் முயற்சி எடுக்க வேண்டும்.
பல ஆண்டுகளுக்கு முன்பே விதவை திருமணத்தை ஊக்குவித்த கேரளாவில், திருமணத்தின் மதிப்பை கேரள இளைஞர்களிடையே கற்பிக்கத் தவறிவிட்டோம். இரண்டு நபர்களுக்கு இடையிலான அடிமைத்தனம், சரியான உறவாக இருக்க முடியாது. இது தொடர்பாக அடிப்படை கல்வி மட்டத்திலிருந்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளிப் பாடத்திட்டத்தில் முறையான பாலியல் கல்வி மற்றும் ஒழுக்கக்கேட்டிற்கு எதிரான விழிப்புணர்வை இணைக்க வேண்டும். உயர் நீதிமன்ற உத்தரவை கருத்தில் கொண்டு, மாநில அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.


Tags : Kerala , Kerala, which is a pioneer in education in the country, is suffering from the social disease of dowry: Tragedy due to the subsequent death of young girls ..!
× RELATED தமிழக – கேரள எல்லையோர கிராமங்களில்...