×

உ.பி-யில் 3 ஆண்டில் 6,476 துப்பாக்கிச் சூடு: மாஜி ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் கண்டனம்

லக்னோ: உத்தரபிரதேசத்தில் கடந்த 3 ஆண்டில் 6,476 துப்பாக்கிச் சூடு நடந்துள்ளதாகவும், அதில் 124 பேர் கொல்லப்பட்டதாகவும் முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். முன்னாள் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் அடங்கிய 87 பேர் கூட்டாக வெளியிட்ட திறந்தவெளி அறிக்கையில், ‘உத்தரபிரதேசத்தில் நடக்கும் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு, சட்டத்தின் ஆட்சிக்கு எதிரானது. மாநிலத்தில் சட்டவிரோதக் கொலைகள், சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான தாக்குதல், மதமாற்றத்திற்கு எதிரான சட்டங்களை தவறாகப் பயன்படுத்துதல் அதிகரித்துள்ளன. அரசு நிர்வாகத்தின் அனைத்து கட்டமைப்புகளும் இடிந்து விழுந்துள்ளன. இதனை தடுத்து நிறுத்தாவிட்டால், ஜனநாயக அழிவுக்கு வழிவகுக்கும். குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து போராடியவர்களுக்கு எதிராக உத்தரபிரதேச அரசு அடக்குமுறையை கையாண்டது.

அலிகாரில் அமைதியாக போராட்டத்தில் போலீசாரின் தாக்குதல்கள் நடந்தன. பயங்கரவாதிகளுக்கு எதிராக பயன்படுத்தப்படும் கையெறி குண்டுகள் பயன்படுத்தப்பட்டன. கண்ணீர்ப்புகைக் குண்டுகள் வீசப்பட்டன. 10,900 எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டது. போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், 22 பேர் கொல்லப்பட்டனர். அரசின் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாக கூறி, தனிமனித சொத்துகளை கையகப்படுத்துவதை தடுத்து நிறுத்த வேண்டும். போலீஸ் தரவுகளின்படி, கடந்த 2017 முதல் 2020ம் தேதி வரை 6,476 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடந்துள்ளன. 124 குற்றவாளிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இவர்களில் பெரும்பாலோர் சாதாரண குற்றவாளிகள் அல்லது அப்பாவிகள் என்று கூறப்பட்டுள்ளது. மேற்கண்டோருக்கு எதிராக நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை’ என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : UP ,IAS ,IPS , 6,476 shootings in 3 years in UP: Former IAS, IPS officers condemned
× RELATED உ.பியில் மாற்றத்திற்கான அலை வீசுகிறது: அகிலேஷ் நம்பிக்கை