×

சைபர் தாக்குதல்களை தடுக்காவிட்டால் பொருளாதார தடை விதிக்க நேரிடும்: ரஷிய அரசுக்கு அமெரிக்கா எச்சரிக்கை !

வாஷிங்டன்: ரஷியாவில் இருந்து வரும் சைபர் தாக்குதல்களை தடுக்க முறையான நடவடிக்கைகளை எடுக்காவிட்டால் மிகவும் மோசமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று ரஷியாவை அமெரிக்கா எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் சமீப காலமாக சைபர் தாக்குதல் மிக பெரும் அச்சுறுத்தலாக மாறி வருகிறது.‌ கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அமெரிக்க அரசின் முக்கிய துறைகளின் கம்ப்யூட்டர்களில் ஹேக்கர்கள் ஊடுருவி உளவு பார்த்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அமெரிக்காவின் உள்துறை, பாதுகாப்பு, உள்நாட்டு பாதுகாப்பு, நிதி மற்றும் வணிகம் போன்ற 9 அரசு துறைகள் மற்றும் மைக்ரோசாப்ட் உள்பட 17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் மீது இந்த சைபர் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷியா இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டது. ஆனால் ரஷியா அதனை திட்டவட்டமாக மறுத்தது.

இந்த நிலையில் அமெரிக்காவின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமான ‘கசேயா மீது கடந்த 2 வாரங்களுக்கு முன்பு ‘ரான்சம்வேர் தாக்குதல் நடத்தப்பட்டது. இது கடந்த டிசம்பர் மாதம் அரசு துறைகளை குறிவைத்து நடத்தப்பட்ட சைபர் தாக்குதலை விட பல மடங்கு பெரிது என சைபர் பாதுகாப்பு வல்லுனர்கள் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அதிபர் ஜோ பிடனிடம் இந்த விவகாரத்தில் ரஷியா ஏதேனும் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுமா?” என செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில் அதற்கு பதில் அளித்த ஜோ பைடன், “ஆம், சைபர் தாக்குதல்களை தடுக்க ரஷிய அரசு நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் அந்த நாடு பொருளாதார தடை உள்ளிட்ட மிகவும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : US ,Russian , Cyber Attacks, Russian Government, US, Warning
× RELATED அமெரிக்காவின் மேரிலேண்ட்...