×

வேலூர் சிறை கண்காணிப்பாளர் கோரிக்கையை ஏற்று ஆயுள் தண்டனை கைதியின் மகனுக்கு கல்லூரி கட்டணம் ரத்து

வேலூர்: வேலூர் ஆண்கள் மத்திய சிறையில் தண்டனை, விசாரணை கைதிகள் என 700க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். கைதிகளின் நலன் பாதுகாக்க, அவர்களின் குறைகள் சிறை நன்னடத்தை அலுவலர் மூலமாக கேட்கப்பட்டு வருகிறது. இதில் கைதிகளின் தகுதிவாய்ந்த குறைகள் மீது சிறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். சென்னையை சேர்ந்த கிருஷ்ணன், குற்ற வழக்கில் வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக சிறை நன்னடத்தை அலுவலர் மோகன் கைதிகளிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவரிடம் கிருஷ்ணன், ‘‘என்னுடைய மகன் கல்லூரி படிப்பிற்கு பணம் செலுத்த முடியாததால் படிப்பை பாதியில் நிறுத்தி விட்டான். அவன் தொடர்ந்து பயில உதவ வேண்டும்’’ என கோரிக்கை வைத்தார்.

இதுகுறித்து சிறை நன்னடத்தை அலுவலர், கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினியிடம் தெரிவித்தார். இதையடுத்து கண்காணிப்பாளர் கிருஷ்ணனின் நிலை குறித்து அறிந்து அவரது மகனின் படிப்புக்கு உரிய உதவிகள் மேற்கொள்ள நடவடிக்கை எடுத்தார். இதையடுத்து கிருஷ்ணனின் மகனின் கல்லூரி, மற்றும் கட்டணம் தொடர்பான விவரங்களை சேகரித்தார். அதில் அவர் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி (டயாலிஸிஸ் டெக்னாலஜி) படிப்ைப முதலாமாண்டு முடித்துவிட்டு கட்டணம் செலுத்த முடியாமல் வீட்டில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்திற்கு மாணவனின் படிப்பை தொடர உதவ வேண்டுமென கோரிக்கை கடிதம் ஒன்றை வேலூர் மத்திய சிறை கண்காணிப்பாளர் எழுதியிருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று அந்த மாணவரின் 2 ஆண்டுகளுக்கான கல்விக் கட்டணம் மொத்தம் ₹1.80 லட்சத்தை ரத்து செய்வதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது என்று கண்காணிப்பாளர் ருக்மணி பிரியதர்ஷினி தெரிவித்தார்.

Tags : Vellore Jail Superintendent , Vellore Jail Superintendent accepted the request College fee for life sentence prisoner's son canceled
× RELATED மேட்டூர் அணையின் மேற்குக்கரை பாசன...