×

வீராணம் ஏரியை வந்தடைந்தது காவிரி நீர்

காட்டுமன்னார்கோவில்: வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக காவிரி நீர் வந்தடைந்தது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.கடந்த ஜூன் 12ம் தேதி முதல்வர் மு.க.ஸ்டாலின், பாசனத்திற்காக மேட்டூர் அணையை திறந்து வைத்தார். இதையடுத்து 17 நாட்களுக்கு பிறகு தஞ்சை மாவட்டம் கீழணைக்கு காவிரி நீர் வந்தது. அணைக்கு நீர்வரத்து 750 கன அடியாக இருப்பதால், அணையின் பாதுகாப்பு கருதியும் மேலும் வீராணம் ஏரியை நிரப்பும் பொருட்டும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், கீழணையில் உள்ள வடவாறு தலைப்பில் 537 கனஅடி நீரை நேற்றுமுன்தினம் வீராணம் ஏரிக்கு திறந்து விட்டனர். நேற்று காலை வீராணம் ஏரிக்குள் நீர் வந்தது.

இது குறித்து பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், கீழணைக்கு தண்ணீர் வரத்தின் அதிகரிப்பால் வீராணம் ஏரியை நிரப்புவதற்காக தண்ணீர் திறந்துள்ளோம். அடுத்த 10 நாளில் வீராணம் ஏரி முழு கொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது. வீராணத்தில் இருந்து சென்னையின் குடிநீர் தேவைக்கு நீர் திறக்கப்படும். அதே போல், 27 பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் திறக்கப்படும்” என்றனர். வீராணம் ஏரி நிரம்பு வதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Tags : Cauvery ,Veeranam Lake , The Cauvery water reached Veeranam Lake
× RELATED மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 68 கனஅடி