215வது நினைவுதினம் அனுசரிப்பு வேலூர் சிப்பாய் புரட்சி நினைவுத்தூணுக்கு மரியாதை

வேலூர்: இந்திய முதல் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட வேலூர் சிப்பாய் புரட்சி கடந்த 1806 ஜூலை 10ம் தேதி நடந்தது. சுமார் 8 மணி நேரம் நடந்த சிப்பாய்  புரட்சியில் 800 இந்திய சிப்பாய்கள் வீரமரணம் அடைந்தனர். 600 பேர் கைது  செய்யப்பட்டனர். மேலும் 15 ஆங்கிலேய அலுவலர்கள் உட்பட 135 ஆங்கிலேயர்கள்  கொல்லப்பட்டனர். அதைத்தொடர்ந்து, நாடு முழுவதும் சுதந்திரத்திற்கான போராட்டம் வெடித்தது. போராட்டத்தில் வீரமரணம் அடைந்தவர்களின் நினைவாக வேலூர் மக்கான் சிக்னல் அருகே சிப்பாய் புரட்சி நினைவு தூண் நிறுவப்பட்டு ஆண்டுதோறும் ஜூலை 10ம் தேதி வீரவணக்கம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி, 215வது சிப்பாய் புரட்சி நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. நினைவு தூண் முழுவதும் வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. சுற்றிலும் உள்ள தடுப்பு வேலிகள் வண்ணம் தீட்டப்பட்டு புதுப்பொலிவுடன் காட்சி அளித்தது. அதைத்தொடர்ந்து, காலை 8 மணியளவில் கலெக்டர் குமாரவேல்பாண்டியன், எஸ்பி செல்வகுமார், டிஆர்ஓ பார்த்தீபன், எம்எல்ஏ கார்த்திகேயன், ஏஎஸ்பி ஆல்பர்ட்ஜான், முன்னாள் படை வீரர் நல உதவி இயக்குநர் செந்தில்குமார் ஆகியோர் சிப்பாய் புரட்சி நினைவு தூணுக்கு மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினர். இதில், முன்னாள் ராணுவ வீரர்கள், அரசுத்துறை அதிகாரிகள், பள்ளி, கல்லூரிகளின் தேசிய மாணவர் படையினர் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: