இறுதி திட்ட அறிக்கைக்கு அரசின் ஒப்புதலோடு அறிவிப்புகள் வெளியிடும் வரை ஆர்டிஐயில் தகவல் தரக்கூடாது: தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

மதுரை: இறுதி திட்ட அறிக்கைக்கு அரசின் ஒப்புதலோடு அறிவிப்பு வெளியிடும் வரை அது தொடர்பாக ஆர்டிஐயில் தகவல் கொடுக்கக் கூடாது என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையத்திற்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.  கன்னியாகுமரி - வில்லுக்குரி இடையிலான இரு வழிச்சாலையை நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிக்காக நிலத்தை கையகப்படுத்தும் அறிவிப்பை எதிர்த்தும், எம்எல்ஏ தலையீட்டால் சர்ச் பகுதியை காப்பாற்றும் நோக்கத்தில் திட்டத்தை மாற்றியமைத்ததாகவும் கூறி, சிலர் ஐகோர்ட் மதுரை கிளையில் கடந்த 2016ல் மனு செய்திருந்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் பிறப்பித்த உத்தரவு: இறுதி திட்ட அறிக்கை முடிவாவதற்கு முன்பே தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆர்டிஐயில் தகவல் கொடுத்துள்ளது.   இதனால்தான் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக திட்டப்பணி முடியாமல் கிடப்பில் போயுள்ளது.

எம்எல்ஏவாக இருப்பவரிடம் தொகுதி மக்கள் பலரும் தங்களது கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிப்பர். அந்த மனுக்களை அவர் உரிய அதிகாரிகளுக்கு பரிந்துரைப்பது வழக்கம். ஒரு எம்எல்ஏவாக அவரது கடமையை அவர் செய்துள்ளார். இதில், எம்எல்ஏ தலையீட்டால் தான் திட்டம் மாற்றியமைக்கப்பட்டது என கூற முடியாது. வழிபாட்டுத் தலம் என்ற அடிப்படையில் மாற்றியிருக்கலாம். சுமார் ₹1,300 கோடி மதிப்பிலான இந்த திட்டத்தில் சுமார் 90 சதவீத பணிகள் முடிந்துள்ளன. பொது நலன் சார்ந்தது இந்த திட்டம். வழக்கால் சுமார் ஒன்றரை கி.மீ தூர பணிகள் மட்டும் முடியாமல் போயுள்ளது. மனுதாரர்களின் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. இனிவரும் காலங்களில், ஒரு திட்டம் தொடர்பான விரிவான இறுதி திட்ட அறிக்கை பெறப்பட்டு அதற்கு அரசுகளின் ஒப்புதல் பெற்று முறையான அறிவிப்பு வெளியிட்டு, அதற்கான பணிகள் துவங்கும் வரை அந்த திட்டம் தொடர்பான தகவலை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் ஆர்டிஐயில் கொடுக்கக் கூடாது. மனுதாரர்கள் தங்களது நிலத்திற்குரிய இழப்பீடு தொடர்பாக அதிகாரிகளிடம் ஆஜராகி பெற்றுக் கொள்ளலாம். மீதமுள்ள ஒன்றரை கி.மீ தூர நான்குவழிச்சாலை பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்பதால் இந்த மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

More
>