×

குமரி மாவட்டத்தில் கொட்டித்தீர்த்த கனமழை: பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு

நாகர்கோவில்: குமரி மாவட்டம் முழுவதும் விடிய விடிய கனமழை கொட்டித்தீர்த்த நிலையில் பேச்சிப்பாறை அணையில் மீண்டும் மறுகால் திறக்கப்பட்டுள்ளது. குமரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் மழை பெய்ய தொடங்கியது. இது நேற்று அதிகாலை கன மழையாக மாறியது. விடிய விடிய மாவட்டம் முழுவதும் கொட்டித்தீர்த்தது. ஒரு சில பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. மலையோர பகுதிகள், அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. நாகர்கோவில் வடசேரியில் காசி விஸ்வநாதர் கோயில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் பெரும் பள்ளம் ஏற்பட்டு அதில் மழைநீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கனமழை காரணமாக குழித்துறை தாமிரபரணி, பழையாறு, வள்ளியாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

தொடர்ந்து பெய்யும் மழை காரணமாக 48 அடி கொள்ளளவு கொண்ட பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 45.37 அடியாக உயர்ந்தது. அணைக்கு 1,466 கன அடி நீர் வரும் நிலையில் 497 கன அடி திறந்துவிடப்பட்டிருந்தது. 3,084 கன அடி நீர் உபரியாக மறுகால் வழியாகவும் திறந்துவிடப்பட்டது. இதனால் ஆறுகளின் கரையோர பகுதிகளுக்கு வெள்ள எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பெருஞ்சாணி நீர்மட்டம் 72.71 அடியாகும். அணைக்கு 944 கன அடி தண்ணீர் வந்துகொண்டிருந்தது. சிற்றார்-1ல் 1082 அடியாக நீர்வரத்து காணப்பட்டது. 1052 கன அடி திறந்துவிடப்பட்டது. மாவட்டத்தில் ஒரு சில பகுதிகளில் காற்றுடன் பெய்த மழை காரணமாக ஆங்காங்கே மரக்கிளைகள் முறிந்து விழுந்து இரவில் மின்தடை ஏற்பட்டது. பின்னர் மின் விநியோகம் சீரடைய நீண்ட நேரம் ஏற்பட்டது. நேற்று பகல் வேளையில் மழை குறைந்து வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.




Tags : Kumari district ,Pechipparai dam , Heavy rains in Kumari district: Excess water opening in Pechipparai dam
× RELATED குமரி மாவட்டத்தில் அதிவேக டாரஸ் லாரிகளால் தொடரும் விபத்துக்கள்