ஒரே பெண்ணை காதலிப்பதில் தகராறு பெயின்டர் வெட்டிக்கொலை

தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டை நேதாஜி நகர் 5வது தெருவை சேர்ந்தவர் தங்கம் (எ) தங்கராஜ்(29). பெயின்டர். அதே பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் தரைதளத்தில் வசித்து வந்தார். இந்நிலையில், நேற்று மதியம் 2 மணியளவில் இவர் வீட்டில் இருந்தபோது அங்கு நுழைந்த 3 பேர் கொண்ட மர்ம கும்பல் தங்கராஜை கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றது. இதில் ரத்த வெள்ளத்தில் தங்கராஜ் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக அக்கம்பக்கத்தினர் சம்பவம் தொடர்பாக ஆர்.கே.நகர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தங்கராஜின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் கொலை செய்யப்பட்ட தங்கராஜ் மற்றும் பாலாஜி (எ) அரைசட்ட பாலாஜி ஆகிய இருவரும் ஒரே பெண்ணை காதலித்து வந்துள்ளனர். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் ஏற்பட்ட முன்விரோததத்தால் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. மேலும் போலீசார் வழக்குபதிவு செய்து கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொழிலாளிக்கு வெட்டு: ஏழுகிணறு பகுதியை சேர்ந்தவர் ஜெயக்குமார்(31). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை மண்ணடி பகுதியில் நடந்து சென்றபோது அவ்வழியாக வந்த 3 பேர், வழிமடக்கி தகராறு செய்து கத்தியை எடுத்து ஜெயக்குமாரை விரட்டி சென்று சரமாரி வெட்டிவிட்டு தப்பினர். இதில், அவரது கை, காதுகளில் பலத்த காயமடைந்து ரத்தவெள்ளத்தில் மயங்கிவிழுந்தார். தகவலின்பேரில் வடக்கு கடற்கரை போலீசார், ஜெயக்குமாரை மீட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

Related Stories: