உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மூலமாக ஒரே வாரத்தில் 10,826 மனுக்களுக்கு தீர்வு : கலெக்டர் விஜயா ராணி தகவல்

சென்னை: சென்னை கலெக்டர் விஜயா ராணி  தலைமையில் கடந்த மாதம் 28ம் தேதி ஆய்வுக் கூட்டம் நடந்தது. இதில், முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டு, அவரது நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கொடுக்கப்பட்ட மனுகள் மீது உடனடியாக தீர்வு காணுவது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.மேலும், நிலுவையில் உள்ள சான்றிதழ்கள் வழங்குவது, பட்டா வழங்குவது தொடர்பாகவும் ஆலோசனை நடத்தப்பட்டது. இதில், சென்னை வருவாய் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து கோட்டாட்சியர்கள் அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் வருவாய் துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர். அப்போது கலெக்டர் விஜயாராணி, நிலுவையில் உள்ள உங்கள் தொகுதியில் முதலமைச்சர் மனுக்களின் நிலை, இணையவழி சாதி, இருப்பிடச் சான்றிதழ்,  பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ் வழங்குதல், முதியோர், விதவை ஓய்வூதியம், பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.

கலெக்டரின் கடுமையான அறிவுறுத்தலின்படி தற்போது நேரடி கண்காணிப்பின் மூலம் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் கடந்த மாதம் 29ம் தேதி முதல் ஜூலை 6ம் தேதி வரை நாள் ஒன்றுக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களின் மனுக்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஒரு வார காலத்திற்குள் 10,826 மனுக்களுக்கான சான்றிதழ்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.  மேலும் அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலுவலர்களுடைய தொலைபேசி எண்கள் பொறிக்கப்பட்ட பெயர் பலகையினை அலுவலகங்களில் வைக்க ஆட்சியர் விஜயாராணி அறிவுறுத்தியுள்ளார். அதன்படி தற்போது அனைத்து கோட்டாட்சியர், வட்டாட்சியர் அலுவலகங்களிலும் அலுவலர்களின் தொலைப்பேசி எண்கள் கொண்ட பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இது பொதுமக்களுக்கு பெரிதும் உதவியாக இருப்பதாக பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து கலெக்டர் கூறும்போது, ஒரு வாரத்தில் சுமார் 10,826 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குறைகளை என்னிடமோ, அதிகாரிகளிடமோ நேரில் புகார் தெரிவிக்கலாம். ஏன் தொலைபேசியில் தொடர்பு கொண்டால் கூட உடனடி நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

Related Stories: