×

கொரோனா பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்ய வேண்டும்: பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை

சென்னை: கொரோனா பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும் என்று பொருளாதார நிபுணர்கள் ஆலோசனை வழங்கி உள்ளனர். முதல்வர் மு.கஸ்டாலின்  தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனை குழு’ கூட்டம் வீடியோ கான்பரன்சிங் மூலம் நேற்று முன்தினம் சென்னை, தலைமை செயலகத்தில் நடைபெற்றது. நிதித்துறை கூடுதல் தலைமை செயலாளர் எஸ்.கிருஷ்ணன் வரவேற்புரையாற்றி கூட்டத்தைத் துவக்கி வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசும்போது, ‘தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்கு காரணமான ‘திராவிட மாடல்’ வளர்ச்சி குறித்து பொருளாதார ஆலோசனை குழுவினரிடம் எடுத்துரைத்து, தமிழ்நாடு கண்டு வரும் வளர்ச்சியை எதிர்காலத்தில் மேலும் உயர்த்திடவும், இந்த வளர்ச்சியின் பயன்கள் மாநிலத்தின் அனைத்து பகுதிகளுக்கும் நமது சமுதாயத்தின் அனைத்து பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்,’ என்று கேட்டுக் கொண்டார். பின்னர், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் உரையாற்றினார்.

அவரை தொடர்ந்து பொருளாதார அறிஞர் எஸ்தர் டப்லோ பேசுகையில், ‘பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளி விவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்’ என்றார்.அடுத்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் பேசும்போது, ‘கொரோனா பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும். பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்றார்.

அவரை தொடர்ந்து ஒன்றிய அரசின் முன்னாள் தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன் பேசுகையில், ‘உற்பத்தி துறை, சேவைத் துறை மற்றும் உயர்கல்வி போன்ற பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திட வேண்டும். இத்தகைய வளர்ச்சிக்கு தேவையான கட்டமைப்பு வசதிகளை, குறிப்பாக மின் வசதிகளை மேம்படுத்திட வேண்டும்’ என்றார்.அடுத்து பேசிய பேராசிரியர் ஜீன் டிரீஸ், ‘அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும். ஏழை எளியோர்க்கான சமூக பாதுகாப்பு திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும்’ என்றார்.அடுத்து முன்னாள் ஒன்றிய நிதி செயலாளர் எஸ்.நாராயண் பேசுகையில், ‘அரசு திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்திட வேண்டும். வரி நிர்வாகம் சரியாக முறைப்படுத்தப்பட்டு அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும்’ என்றார்.இறுதியாக, தலைமை செயலாளர் இறையன்பு  நன்றி கூறினார்.




Tags : corona epidemic , Most affected by corona infection The government should provide the necessary assistance to revive small businesses: Economists advise
× RELATED இல்லம் தேடி கல்வி திட்டத்துக்கு...