×

அதிமுக கட்சி தொண்டர்கள் ஒத்துழைக்க மறுப்பு எதிரொலி சசிகலா அரசியல் சுற்றுப்பயணம் தள்ளிவைப்பு: இபிஎஸ்-ஓபிஎஸ் தரப்பு குதூகலம்

சென்னை: கட்சி தொண்டர்கள் பணம் செலவு செய்ய மறுப்பதால், தமிழகம் முழுவதும் சசிகலா அரசியல் சுற்றுப்பயண திட்டத்தை தற்காலிகமாக தள்ளி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு குதூகலம் அடைந்துள்ளனர்.தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தலின்போது, அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்க முடிவு செய்துள்ளதாக சசிகலா அறிவித்தார். இந்நிலையில், தேர்தலில் அதிமுக தோல்வி அடைந்தது. இதை பயன்படுத்தி அதிமுகவை கைப்பற்ற சசிகலா முயற்சி செய்தார். தினசரி அதிமுக தொண்டர்களுக்கு தொலைபேசியில் பேசி, தனது விருப்பத்தை தெரிவித்து வந்தார். ஆனால், சசிகலாவின் திட்டத்துக்கு எடப்பாடி பழனிசாமி எதிர்ப்பு தெரிவித்தார். அனைத்து அதிமுக மாவட்ட செயலாளர்களும், இபிஎஸ், ஓபிஎஸ் பக்கம் இருப்பதால் யாரும் சசிகலா பக்கம் செல்ல தயாராக இல்லை.

ஆனாலும், அதிமுகவில் தனக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டிக்கொள்ள, தினசரி தொலைபேசியில் அதிமுக தொண்டர்களிடம் சசிகலா பேசி, அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார். அதேநேரம் அதிமுகவில் பெரிய நிர்வாகிகள் யாரும் சசிகலாவுக்கு பிடிகொடுக்காமல், போனை எடுக்க மறுத்து விடுகிறார்கள். முன்னதாக, சில தொழிலதிபர்கள் அதிமுகவினரிடம் பேசி, சசிகலா உங்களுக்கு தொலைபேசியில் பேசுவார் என்று கூறி வருகின்றனர். ஆனால், கட்சியில் பெரிய பதவியில் இல்லாதவர்களே சசிகலாவுடன் பேசுகிறார்கள். அவர்களிடம், கொரோனா தொற்று பரவல் முடிந்ததும் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து தொண்டர்களை சந்திக்க திட்டமிட்டுள்ளதாக சசிகலா கூறி வந்தார்.தமிழகத்தில் தற்போது கொரோனா அதிக அளவில் குறைந்துள்ளது. இதனால் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. ஆனாலும், சசிகலா அறிவித்தபடி தனது சுற்றுப்பயணத்தை தொடர ஆர்வம் காட்டாமல் அமைதி காத்து வருகிறார். காரணம், சசிகலாவுக்கு கட்சி தொண்டர்கள் யாரும் பெரிய அளவில் ஆதரவு காட்டாததே ஆகும். சசிகலா ஆதரவாளர்கள் பலரும், அமமுகவில் தான் இருந்து வந்தனர்.

அவர்களும் சட்டமன்ற தேர்தலுக்கு முன்னும், பின்னும் திமுக, அதிமுக கட்சிகளுக்கு தாவி விட்டனர். முன்னாள் எம்எல்ஏக்கள் பழனியப்பன், மாரியப்பன் கென்னடி உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளும் திமுக கட்சிக்கு சென்று விட்டனர். தேர்தலுக்கு முன்பே, பல முன்னணி தலைவர்கள் சசிகலா அணியில் இருந்து வெளியேறி விட்டனர்.தற்போது சசிகலாவுக்கு சி.ஆர்.சரஸ்வதி, செந்தமிழன், திருச்சி ரங்கசாமி, திருவாரூர் காமராஜ் உள்ளிட்ட விரல் விட்டு எண்ணும் அளவிலேயே நிர்வாகிகள் உள்ளனர். அவர்களும் விரக்தியில் உள்ளனர். காரணம், இவர்கள் அனைவரும் சட்டமன்ற இடைத்தேர்தல், நாடாளுமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டமன்ற தேர்தல்என 4 தேர்தலை சசிகலா அணியில் இருந்து சந்தித்துள்ளனர். இவர்கள் தேர்தல் செலவுக்காக கட்சி தலைமை பணம் செலவு செய்யும் என்று எதிர்பார்த்தனர். ஆனால் கட்சி தலைமை செலவு செய்யவில்லை. இதனால் தங்கள் சொந்த பணத்தை செலவு செய்து, இன்று வருமானம் இல்லாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். அதனால் சசிகலா அரசியல் பிரவேசம் மற்றும் அவரது தமிழக சுற்றுப்பயணத்துக்கு ஆர்வம் காட்டாமல் உள்ளனர்.

சசிகலா சுற்றுப்பயணம் உள்ளிட்ட அவரது செயல் திட்டங்களை வெங்கடேஷ் மற்றும் சசிகலா கணவர் நடராஜனின் தம்பிகள் ஆகியோர் கவனித்து வருகின்றனர். ஆனால் அவர்களும் நிர்வாகிகளுக்கு பணம் கொடுக்காமல், சாக்குபோக்கு சொல்லி வருகிறார்கள். இதனால் சசிகலா தரப்பில் இருந்து போன் போட்டால்கூட எடுக்காமல் புறக்கணிக்கிறார்கள். இதற்கு முக்கிய காரணம், பணம்தான் என்று கூறப்படுகிறது.அதனால் சசிகலா தமிழகத்தில் சுற்றுப்பயணம் இப்போதைக்கு வேண்டாம் என்று தள்ளி வைத்துள்ளதாக கூறப்படுகிறது. தனக்கு ஆதரவு தெரிவித்த நபர்களும் கட்சியைவிட்டு ஒதுங்கி இருப்பதால், சசிகலா அதிருப்தியில் உள்ளார். ஆனாலும், தனது அரசியல் பிரவேசம் மற்றும் சுற்றுப்பயணத்தை ரத்து செய்தால் தனக்கு மிகப்பெரிய அசிங்கமாகி விடும் என்று சசிகலா கருதுகிறார். அரசியலை விட்டு ஒதுங்கினால், தன்னிடம் உள்ள பல கோடி ரூபாய் மதிப்புள்ள பினாமி சொத்துக்களை காப்பாற்ற முடியாமல் போய் விடும். கட்சி தொண்டர்களும் பணம் செலவு செய்ய மறுக்கிறார்கள். இதுபோன்ற சூழ்நிலையில், என்ன செய்வது என்று தெரியாமல் சசிகலா திணறி வருகிறார். அதனால், தற்போதைக்கு தனது சுற்றுப்பயணத்தை சில மாதங்கள் தள்ளி வைத்துவிட்டு, பின்னர் அறிவிக்கலாம் என்ற மனநிலைக்கு சசிகலாவுக்கு வந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இபிஎஸ் - ஓபிஎஸ் தரப்பு குதூகலம் அடைந்துள்ளனர்.

Tags : AIADMK ,Sasikala ,EPS-OPS party , Echo of AIADMK volunteers refusing to cooperate Sasikala politics Tour postponement: EPS-OPS party enthusiasm
× RELATED எடப்பாடி கொடுத்த ‘சீக்ரெட் சிக்னல்’...