யூரோ கோப்பை பைனலில் இன்று இத்தாலி - இங்கிலாந்து மோதல்

லண்டன்: யூரோ கோப்பை  தொடரின் பைனலில் இத்தாலி - இங்கிலாந்து அணிகள் இன்று மோதுகின்றன. கால்பந்து ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் இப்போட்டி இந்திய நேரப்படி நள்ளிரவு தாண்டி 12.30க்கு தொடங்குகிறது.மினி உலக கோப்பை தொடராகவே கருதப்படும் யூரோ கோப்பை  கால்பந்து தொடரின் இறுதி ஆட்டம் லண்டன் வெம்ப்ளி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இப்போட்டியில்  இத்தாலி - இங்கிலாந்து அணிகள் களமிறங்குகின்றன. பெரிய தொடர்களின் இறுதிப் போட்டியில் 10வது முறையாக களமிறங்குகிறது இத்தாலி. ஏற்னவே 6 முறை உலக கோப்பை தொடரிலும், 3 முறை யூரோ தொடரிலும் பைனலில் விளையாடி உள்ளதுடன், 1968ல் சாம்பியன் பட்டத்தையும் கைப்பற்றி உள்ளது.அந்த அணி அரை நூற்றாண்டுக்குப் பிறகு 2வது முறை சாம்பியனாகும் முனைப்பில் களமிறங்குகிறது. இங்கிலாந்துக்கு இது 2வது இறுதியாட்டம். ஏற்கனவே 1966ல் உலக கோப்பை பைனலில் விளையாடி உள்ளது. ஏறக்குறைய 55 ஆண்டுகளுக்கு பிறகு யூரோ பைனலில் களம் காண உள்ளது. அதுமட்டுமல்ல 58 ஆண்டு யூரோ வரலாற்றில் முதல் முறையாக பைனலுக்கு முன்னேறியுள்ள இங்கிலாந்து கோப்பையை வெல்லும் கனவில் உள்ளது.

நடப்பு தொடரில் இத்தாலி விளையாடிய ஒரு ஆட்டத்தில் கூட தோற்காமல், டிரா செய்யாமல் அனைத்திலும்  வென்றுள்ளது. இங்கிலாந்து தோல்வி அடையாவிட்டாலும்,  லீக் சுற்றில்  ஸ்காட்லாந்துடன் டிரா செய்தது. சியல்லினி தலைமையிலான இத்தாலி   அணியில்  இமோபில், பரெல்லா, இன்சைன், பெடெரிகோ, பெஸ்ஸினா, லொகடெல்லி... என இந்த தொடரில் கோலடித்த அனைவரும் கலக்க காத்திருப்பது பெரும் பலம்.இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி கேன், ஸ்டெர்லிங் ஆகியோருடன் ஹெண்டர்சன், மகியூர் ஆகியோர் அடித்த கோல்கள் தான் இறுதிப்போட்டி வரை கொண்டு வந்துள்ளது.  அதற்கு பலமுறை உதவி செய்த லூக் ஷா,   கிரீலிஷ்,  ஸ்டோன்ஸ், பிலிப்ஸ்,  வாக்கர், மேசன் ஆகியோரும் நம்பிக்கை  தருகின்றனர். இரு அணிகளின் கோல் கீப்பர்கள் பிக்போர்டு (இங்கிலாந்து),  டொன்னாரும்மா (இத்தாலி)  ஆகியோரின் உழைப்பும் வெற்றி/தோல்வியை நிர்ணயிக்கும். 2வது முறையாக கோப்பையை முத்தமிட இத்தாலியும், முதல் முறையாக சாம்பியனாகி சாதனை படைக்க இங்கிலாந்தும் வரிந்துகட்டுவதால் ஆட்டத்தில் அனல் பறப்பது உறுதி.

Related Stories:

More
>