×

மண்டல பஞ்சாயத்து தலைவர் பதவி உபி. தேர்தலில் வன்முறை பாஜ-சமாஜ்வாடி மோதல்

லக்னோ: உத்தர பிரதேசத்தில் நடந்த மண்டல பஞ்சாயத்து தலைவர் தேர்தல் வன்முறைகள் அரங்கேறின. பல இடங்களில் பாஜ- சமாஜ்வாடி இடையே மோதல் ஏற்பட்டது.உத்தர பிரதேசத்தில் 825 இடங்களுக்கான மண்டல பஞ்சாயத்து தலைவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது. இதில் போட்டியிட 1778 பேர் மனுத்தாக்கல் செய்தனர். இவர்களில் 68 பேரின் மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. 187 பேர் தங்கள்  மனுக்களை வாபஸ் பெற்றனர். 349 பேர் போட்டியின்றி ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். மீதமுள்ள 476 மண்டலங்களுக்கான பஞ்சாயத்து தலைவர் தேர்தல் நேற்று நடந்தது. இதில் காங்கிரஸ், பாஜ, சமாஜ்வாதி உள்ளிட்ட பல்வேறு கட்சி வேட்பாளர்கள், சுயேச்சைகளும் போட்டியிட்டனர். நேற்றைய வாக்குப்பதிவின் போது, பல பகுதிகளில் வன்முறை சம்பவங்கள் நடந்தேறின.

முன்னதாக, சமாஜ்வாடி ஆதரவு பெற்ற பெண் வேட்பாளர் ரித்து சிங்கை மனு தாக்கல் செய்யவிடாமல் பாஜ.வினர் ஆவணங்களை பிடுங்கினர். மண்டல மேம்பாட்டு கமிட்டி உறுப்பினரை பாஜ.வினர் கடத்துவதை தடுத்த அவரது உறவினர் கொல்லப்பட்டார். மற்றொரு வன்முறையின் போது, லக்கிம்பூரில் மண்டல மேம்பாட்டு குழு உறுப்பினராக இருக்கும் பெண், அவரது ஆதரவாளர் ஆகியோரின் சேலையை இழுத்து பாஜ.வினர் மானபங்கபடுத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.  இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கும்படி உபி டிஜிபிக்கு, தேசிய பெண்கள் ஆணையத் தலைவர் ரேகா சர்மா உத்தரவிட்டுள்ளார்.

ராகுல், பிரியங்கா கண்டனம்
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `உபி தேர்தல் வன்முறை சம்பவங்கள் பாஜ.வின் சந்தர்ப்பவாத, புத்திசாலித்தனமான நடவடிக்கை,’ என்று கண்டித்துள்ளார். பிரியங்கா காந்தி தனது டிவிட்டரில், `கடந்த சில ஆண்டுகளுக்கு முன், தன்னை பாலியல் பலாத்காரம் செய்த பாஜ எம்எல்ஏ.வை எதிர்த்து குரல் கொடுத்த பெண் மற்றும் அவரது குடும்பத்தினரை கொல்ல முயன்றனர். தற்போது வேட்புமனு தாக்கல் செய்ய வந்த பெண் வேட்பாளரிடம் பாஜ. எல்லை மீறி நடந்து கொண்டுள்ளது. அதே மாநில அரசின் ஆட்சியில், அதே போன்ற சம்பவம்,’ என்று கூறி வேட்புமனு தாக்கல் செய்ய விடாமல் பாஜ.வினர் தடுக்கும் வீடியோவை இணைத்து பதிவிட்டுள்ளார்.

பாஜ அமோக வெற்றி
உபி.யில் நேற்று நடந்த மண்டல பஞ்சாயத்து தலைவர் தேர்தல் முடிவுகள் நேற்றிரவு வெளியானது. இதில், மொத்தமுள்ள 825 இடங்களில் 630 இடங்களை பாஜ கைப்பற்றியது. ஏற்கனவே, மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தேர்தலிலும் இக்கட்சி அதிக இடங்களை பிடித்தது.



Tags : Zonal Panchayat Chairman ,BJP ,Samajwadi , Position of Zonal Panchayat Chairman உபி. Violence in elections Baja-Samajwadi clash
× RELATED கட்சி மாறி பாஜவுக்கு வாக்களித்த 4...