×

டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்திப்பு

டெல்லி: டெல்லியில் பிரதமர் மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் சந்தித்துள்ளார். 2 நாள் பயணமாக டெல்லி சென்றுள்ள பன்வாரிலால் புரோகித் காலையில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் மற்றும் அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசினார். தமிழ்நாடு ஆளுநர் மாற்றப்படலாம் என்று தகவல் வெளியான நிலையில் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லி சென்றுள்ளார்.

பிரதமர் மோடியை அவரது வீட்டில் தமிழக ஆளுநர் சந்தித்தார். நேற்று இரவு டெல்லி வந்த தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ளார். இன்று காலை ஒன்றிய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து அவருக்கு பூங்கொத்து கொடுத்து பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்தார். பின்னர் குடியரசு தலைவர் மாளிகைக்கு நேரடியாக சென்ற பன்வாரிலால் குடியரசு தலைவருடன் சுமார் அரை மணி நேரம் பேசினார். தமிழ்நாட்டில் தற்போதைய அரசியல் நிலவரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை பேசியுள்ளனர்.

பிரதமர் மோடியுடனான சந்திப்பு என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. மத்திய அரசை பொறுத்தவரையில் பிரதமர் மோடி தலைமையில் கடந்த 2019ஆம் ஆண்டு 2வது முறையாக ஆட்சி அமைத்ததற்கு பிறகு கடந்த வாரம் மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது. 43 அமைச்சர்கள் புதிதாக பதவி ஏற்றுக்கொண்டுள்ளனர். அதற்கு முன்னதாக 8 மாநிலங்களில் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டனர். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கடந்த 2017ஆம் ஆண்டில் இருந்து தமிழக ஆளுநராக இருந்து வருகிறார். அவருடைய பதவி காலம் விரைவில் முடிவடைய உள்ளது. எனவே அவரும் மாற்றப்படுவார். புதிய ஆளுநர் நியமிக்கப்படுவார் என்ற செய்திகள் வெளியானது. இந்நிலையில் இன்று பிரதமர் மோடியுடனான சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Tags : Governor ,Tamil Nadu ,Banwarilal Purohit ,Modi ,Delhi , governor, pm, modi, banwarilal purohit
× RELATED ஆளுநர் ஆர்.என்.ரவி திடீர் டெல்லி பயணம்