கோபா அமெரிக்கா கால்பந்து: பெருவை வீழ்த்தி கொலம்பியா 3வது இடம்

பிரேசிலியா: தென்அமெரிக்க கண்டத்தைச் சேர்ந்த 10 அணிகள் பங்கேற்ற கோபா அமெரிக்கா கால்பந்து தொடர் பிரேசிலில் நடந்து வருகிறது. இதில், அரையிறுதியில் பிரேசில் 1-0 பெருவையும், அர்ஜென்டினா பெனால்டி ஷுட்அவுட்டில் 3-2 என கொலம்பியாவையும் வீழ்த்தி இறுதி போட்டிக்கு நுழைந்தன. இந்நிலையில் 3வது இடம் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் போட்டி இன்று பிரேசிலியா நகரில் உள்ள மானே கரிஞ்சா தேசிய அரங்கில் நடந்தது. இந்திய நேரப்படி அதிகாலை 5.30 மணிக்கு தொடங்கி நடந்த இந்த போட்டியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க போராடினர். முதல் பாதியில் 45வது நிமிடத்தில் பெரு வீரர் யோஷிமர் யோடான் கோல் அடித்து முன்னிலை ஏற்படுத்தினார்.

2வது பாதியில் ஆட்டம் தொடங்கிய சில நிமிடத்தில், (ஆட்டத்தின் 49வது நிமிடம்) கொலம்பியாவின் ஜூவான் குவாட்ராடோ கோல் அடித்து சமன் செய்தார். 66வது நிமிடத்தில் அந்த அணியின் லூயிஸ் டயஸ் கோல் அடிக்க கொலம்பியா 2-1 என முன்னிலை பெற்றது. ஆனால் 84வது நிமிடத்தில், பெருவின் கியான்லுகா கோல் அடித்து சமன் ஏற்படுத்தினார். 90 நிமிடங்கள் முடிவில் 2-2 என சமனில் இருக்க கூடுதலாக 6 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டது. இதில் 94வது நிமிடத்தில், லூயிஸ்டயஸ் அற்புதமாக கோல் அடித்தார். இதனால் 3-2 என கொலம்பியா வெற்றி பெற்று 3வது இடம் பிடித்தது.

நாளை இறுதி போட்டி

பிரேசில் தலைநகர் ரியோ டிஜெனிரோ நகரில் இந்திய நேரப்படி நாளை அதிகாலை 5.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் நடப்பு சாம்பியன் பிரேசில்-அர்ஜென்டினாவுடன் பலப்பரீட்சை நடத்த உள்ளது. 10வது முறையாக கோப்பையை வெல்ல பிரேசில் களம் காண்கிறது. மறுபுறம் மெஸ்சி தலைமையிலான அர்ஜென்டினா 14 முறை பட்டம் வென்றுள்ளது. இரு அணிகளும் இதுவரை 111 போட்டியில் மோதியதில் பிரேசில் 46, அர்ஜென்டினா 40ல் வென்றுள்ளன. 25 போட்டி சமனில் முடிந்துள்ளது.

Related Stories:

>