விம்பிள்டன் டென்னிஸ் தொடர்: 7வது முறையாக பைனலில் ஜோகோவிச்..! இத்தாலியின் பெரேட்டினியுடன் நாளை மோதல்

லண்டன்: கிராண்ட்ஸ்லாம் தொடரில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் ஆடவர் ஒற்றையர் பிரிவில் நேற்று அரையிறுதி போட்டிகள் நடந்தது. முதல் அரையிறுதி ஆட்டத்தில், 7ம் நிலை வீரரான இத்தாலியின் மேட்டியோ பெரேட்டினி(25), 14ம் நிலை வீரரான போலந்தின் ஹூபர்ட் ஹர்காஸ் (24) மோதினர். இதில் 6-3, 6-0, 6-7, 6-4 என்ற செட் கணக்கில், பெரேட்டினி வெற்றி பெற்று முதன்முறையாக பைனலுக்குள் நுழைந்தார். மேலும் பைனலுக்குள் நுழைந்த முதல் இத்தாலி நாட்டவர் என்ற சாதனையையும் அவர் படைத்தார். தொடர்ந்து நடந்த மற்றொரு அரையிறுதியில் நம்பர் ஒன் வீரரும் நடப்பு சாம்பியனுமான செர்பியாவின் நோவக் ஜோகோவிச், (34), 10ம் நிலை வீரரான கனடாவின் டெனிஸ் ஷபோவலோவை(22) எதிர்கொண்டார். அனுபவ வீரரான ஜோகோவிச்சிற்கு ஷபோவலோ கடும் சவால் கொடுத்தார்.

டைபிரேக்கர் வரை சென்ற முதல் செட்டை 7(7)-6(3) என்ற செட் கணக்கில், ஜோகோவிச் கைப்பற்றினார். 2வது செட்டை 7-5, 3வது செட்டை 7-5 என கைப்பற்றிய ஜோகோவிச் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றார். நாளை நடைபெறும் இறுதி போட்டியில் பெரேட்டினியுடன் ஜோகோவிச் பலப்பரீட்சை நடத்த உள்ளார். ஜோகோவிச் விம்பிள்டனில் இதுவரை 6 முறை பைனலுக்கு முன்னேறிய நிலையில் 5 முறை பட்டம் வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது 7வது முறையாக பைனலுக்குள் நுழைந்துள்ளார். ஜோகோவிச் இதுவரை 19 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். நாளையும் பட்டம் வென்றால், 20வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்று, ரோஜர்பெடரர், நடாலின் சாதனையை சமன் செய்வார். மகளிர் ஒற்றையரில் இன்று மாலை 6.30 மணிக்கு நடைபெறும் இறுதி போட்டியில் நம்பர் ஒன் வீராங்கனையான ஆஸ்திரேலியாவின் ஆஷ்லி பார்டி, செக்குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா மோதுகின்றனர்.

Related Stories: