×

கோவை தனியார் பள்ளி அருகே குவியல், குவியலாக போதை ஊசிகள், மாத்திரைகள்-தொற்று பரவும் அபாயம்; பகுதிவாசிகள் அச்சம்

கோவை : கோவையில் தனியார் பள்ளி அருகே குவியல், குவியலாக போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகள் சிதறி கிடப்பதால் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். கொரோனா ஊரடங்கு காரணமாக கோவையில் பல நாட்களாக டாஸ்மாக் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் போதைக்கு அடிமையான இளைஞர்கள் பலர் மாற்று வழியை தேட ஆரம்பித்தனர். வலி நிவாரணி போன்ற மாத்திரைகளை மருந்துகடைகளில் வாங்கி அவற்றை ஊசி மூலம் செலுத்தி போதை ஏற்றினர். இந்நிலையில், கோவை குனியமுத்தூரில் சமீபத்தில் போதை மாத்திரை விற்ற கும்பலை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து 100க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
 
இதற்கிடையே உக்கடம் பகுதியில் இளைஞர்கள் பலர் கூட்டமாக அமர்ந்து மாத்திரையை தண்ணீரில் கரைத்து சிரஞ்சி மூலம் உடலில் செலுத்தி போதை ஏற்றிக்கொள்ளும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவியது. தொடர்ந்து போதை ஊசி கும்பலை பிடிக்க 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.  மருந்து கடைகளில் டாக்டர்களின் பரிந்துரை சீட்டு வலி நிவாரணி மாத்திரையை விற்றால் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் குனியமுத்தூர் சுகுணாபுரத்தில் உள்ள தனியார் பள்ளி அருகே குவியல், குவியலாக போதை ஊசிகள், மாத்திரைகள், தண்ணீர் பாட்டில்கள், காண்டம் மற்றும் மதுபாட்டில்கள் கிடப்பது அப்பகுதிவாசிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இது குறித்து அந்த பகுதி மக்கள் கூறியதாவது: இந்த பள்ளிக்கூடம் கடந்த 1987ம் ஆண்டு முதல் செயல்பட்டு வருகிறது. 900 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்தில் சில விஷமிகள் புகுந்து கஞ்சா, போதை ஊசி மற்றும் மது அருந்தி செல்கின்றனர். சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளதால் பல விரும்பத்தகாத செயல்கள் நடைபெறுகின்றன.

இதன் காரணமாக நாங்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் உள்ளது. மேலும் போதை ஆசாமிகளால் எங்களுக்கு பாதுகாப்பற்ற நிலை நிலவுகிறது. மேலும் பள்ளியின் பின்புறம் காலி இடத்தில் ஏராளமான போதை ஊசிகள் மற்றும் மாத்திரைகள் குவிந்து கிடக்கிறது. அவற்றை நாய்கள் கவ்விக்கொண்டு குடியிருப்பு மத்தியில் போடுவதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. இந்த பகுதிக்கு வரும் இளைஞர்களை போலீசார் கண்காணித்தால் மட்டுமே மக்கள் நிம்மதியாக வாழ முடியும். போலீசார் போதைப்பழக்கத்தில் சிக்கித்தவிக்கும் இளைஞர்களை மீட்டெடுக்க உரியநடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags : Coimbatore , Coimbatore: A pile of drugs and pills near a private school in Coimbatore spread the infection.
× RELATED கோவை மாநகராட்சி நீச்சல் குளத்தில் குவியும் சிறுவர்கள்