விருதுநகர் மாவட்டத்தில் ஆவின் பாலகங்களில் நெய், மில்க்சேக், பட்டர், பன்னீர் தட்டுப்பாடு-அரசின் உத்தரவிற்கு மாறாக செயல்படுவதாக புகார்

விருதுநகர் : விருதுநகர் மாவட்டத்தில் 140 ஆவின் பாலகங்கள் செயல்பாட்டில் உள்ளன. ஆவின் பாலகங்களில் ஆவின் பால் மற்றும் உப பொருட்களான நெய், மில்க்சேக், பட்டர், பன்னீர் உள்ளிட்ட உப பொருட்களை மட்டும் விற்பனை செய்ய வேண்டுமென்பது விதிமுறை. அதிமுக ஆட்சியில் 10 ஆண்டுகளில் ஆவின் பாலங்களில் வடை, டீ, காபி, தின்பண்டங்கள், சிகரெட், புகையிலை, பிஸ்கட், மிட்டாய் என அனைத்து வித பொருட்களும் விற்பனை செய்யப்பட்டன.

விருதுநகர் மாவட்டத்தில் தினசரி பால் கொள்முதல் 30 ஆயிரம் லிட்டரில் இருந்து தற்போது 18 ஆயிரமாக குறைந்து விட்டது. கொள்முதல் செய்யப்படும் பால் எங்கு விற்பனை செய்யப்படுகிறது. அவற்றில் இருந்து உற்பத்தி செய்யப்படும் உப பொருட்கள் எங்கே அனுப்பப்படுகிறது என்ற கேள்வி இருந்து வருகிறது.

ஆட்சி மாற்றத்திற்கு பிறகு ஆவின் பால் விலை லிட்டருக்கு ரூ.3 வரை குறைக்கப்பட்ட நிலையில், மக்கள் ஆவின் பால், உப பொருட்களை வாங்க ஆர்வம் செலுத்துகின்றனர். ஆனால், விருதுநகர் மாவட்ட ஆவின் பாலகங்களில் பால் உள்ளிட்ட உப பொருட்கள் எதுவும் கிடைக்கவில்லை. பால்வளத்துறை அமைச்சர் ஆவின் பாலங்களில் அனைத்து உப பொருட்கள் விற்பனை செய்ய வேண்டுமென உத்தரவிட்டுள்ளார். ஆனால் உற்பத்தியாகும் நெய், மில்க்சேக், பட்டர், பன்னீர் வரை அனைத்தும் சென்னை, நாகர்கோவில், தூத்துக்குடி மாவட்டங்களுக்கு அனுப்பப்படுவதாக புகார் எழுந்துள்ளது.

விருதுநகர் மாவட்ட பால் உற்பத்தியாளர்கள் சங்க உறுப்பினர்கள் நலச்சங்க மாவட்ட செயலாளர் பாலமுருகன் கூறுகையில், ‘மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களில் கடந்த இரண்டு மாதங்களாக நெய் முதல் அனைத்து உப பொருட்களும் வழங்கப்படவில்லை. விருதுநகர் மாவட்ட ஆவின் ரூ.30 கோடி நஷ்டத்தில் இயங்குகிறது. உப பொருட்கள் உற்பத்திக்கு என 20 புதிய ஊழியர்களை கடந்த ஆண்டு நியமனம் செய்தும் உப பொருட்கள் கிடைக்கவில்லை.

நெய்யினை சென்னை, நாகர்கோவில், தூத்துக்குடி மண்டலங்களுக்கு அனுப்புகின்றனர். உற்பத்தி செய்யப்படும் மாவட்டத்தில் விற்பனை செய்தால் மட்டும் லாபம் அதிகம் கிடைக்கும். வெளிமாவட்டங்களுக்கு அனுப்பி விற்பனை செய்தால் லாபம் குறைவு. பால்வளத் துறை அமைச்சர் உத்தரவிற்கு பிறகும் மாவட்டத்தில் உள்ள ஆவின் பாலகங்களுக்கு எந்த உபபொருட்களும் வழங்குவதில்லை. இதுகுறித்து பொதுமேலாளருக்கு மனு கொடுத்திருக்கின்றோம்’ என தெரிவித்தார்.

Related Stories:

More
>