×

திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் பயன்பெறும் வகையில் 39 அரசு டவுன் பஸ்கள் இயக்கம்-கலெக்டர் தகவல்

திருவாரூர் : திருவாரூர் மாவட்டத்தில் மகளிர் பயன்பெறும் வகையில் 39 அரசு நகர பேருந்துகள் இயக்கப்படுவதாக கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
திருவாரூர் புதிய பஸ் நிலையத்திலிருந்து மகளிர் பயன்பெறும் வகையில் புறநகர பஸ்களில் 5 பஸ்கள் டவுன் பஸ்களாக மாற்றம் செய்யப்பட்டு நேற்று புதிய வழித்தடத்தில் இயக்கப்பட்டது.

அதன்படி திருவாரூரிலிருந்து வடபாதிமங்கலம் வழியாக கோட்டூர் வரையிலும், ஆந்தகுடி வழியாக நாகலூர் வரையிலும், பெருங்கடம்பனூர் வழியாக நாகை வரையிலும், பாக்கம் கோட்டூர் வழியாக திட்டச்சேரி வரையிலும், தப்பளாம்புளியூர் வழியாக மோகனூர் வரையிலும் என 5 பஸ்களை கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மற்றும் எம்எல்ஏ பூண்டி கலைவாணன் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். மேலும் புதிய வழி தடங்களாக திருவாரூரிலிருந்து குடவாசல் வழியாக அடவங்குடிக்கும், நீடாமங்கலத்திற்கும் மற்றும் மன்னார்குடியிலிருந்து ஆர்ப்பாவூர் வழியாக குடவாசலுக்கும் என 3 பஸ்கள் துவக்கி வைக்கப்பட்டது.

இது குறித்து கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் கூறியதாவது, தமிழக அரசு மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி தேர்தல் வாக்குறுதியாக அளிக்கப்பட்ட பஸ்களில் மகளிருக்கு இலவச பயணம் என்ற அறிவிப்பின்படி முதல்வராக பொறுப்பேற்ற அன்றே இதற்கு முதல்வர் கையெழுத்திட்டார். அதன் பின்னர் மகளிர் மட்டுமின்றி மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ஆகியோருக்கும் இலவச பயணங்களை அறிவித்துள்ளார்.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் ஏற்கனவே மகளிர், மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் பயன்பெறும் வகையில் திருவாரூரில் 12 பஸ்களும், மன்னார்குடியில் 10 பஸ்களும், நன்னிலத்தில் 8 பஸ்களும், திருத்துறைப்பூண்டியில் 4 பஸ்களும் என 34 டவுன் பஸ்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில் இன்றைய தினம் (நேற்று) புதிதாக மேலும் 5 பஸ்கள் என மொத்தம் மகளிருக்காக 39 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் அரசு போக்குவரத்து கழக நாகை மண்டல மேலாளர் மகேந்திரகுமார், துணை மேலாளர்கள் சிதம்பர குமார் (தொழில்நுட்பம்) ராஜா (வணிகம்) ஒன்றிய குழு தலைவர் தேவா, நகராட்சி ஆணையர் பிரபாகரன், மாவட்ட வழங்கல் அலுவலர் (பொ) கீதா, தாசில்தார் நக்கீரன், பழனி ஆண்டவர் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் பிரகாஷ் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

மன்னார்குடி பஸ் நிலையம், ஓட்டல்களில் கலெக்டர் ஆய்வு

மன்னார்குடி: கலெக்டர் காயத்ரி கிருஷ்ணன் மன்னார்குடி பஸ் நிலையம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின் போது, அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகள் சரி வர பின்பற்றப்படுகிறதா என்பதை நேரில் பார்வையிட்டார். மேலும் பஸ் நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள சுகாதாரம், தூய்மை பணிகளை பார்வையிட்ட கலெக்டர், அங்கு பயணத்திற்கு தயாராக இருந்த அரசு பஸ்களில் ஏறி பயணிகள் உள்பட அனைவரும் முக கவசம் அணிந்துள்ளனரா, பஸ்சிற்குள் போதிய அளவில் தனிமனித இடைவெளி பின்பற்றபடுகிறதா என ஆய்வு செய்தார்.

தொடர்ந்து, கடைவீதிகளில் உள்ள உணவகங்களை பார்வையிட்ட கலெக்டர், அங்கு விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்கள் பாதுகாப்பாகவும், சுகாதார முறையில் வைத்து விற்பனை செய்ய வேண்டுமெனவும், விற்பனையில் ஈடுபடுவோர் முககவசம் அணிதல் உள்ளிட்டவைகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என  வணிகர்களிடம் வலியுறுத்தினார்.

Tags : Government Town Buses ,Thiruvarur ,District , Thiruvarur: Collector Gayatri Krishnan has said that 39 government city buses will be operated for the benefit of women in Thiruvarur district.
× RELATED தேர்தல் மாதிரி வாக்கு பதிவு அவசியம் விதி மீறலுக்கு இடம் கொடுக்க கூடாது