கலசபாக்கம் ஒன்றியத்தில் ஆபத்தான நிலையில் ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடங்கள்-புதிய கட்டிடம் கட்ட கோரிக்கை

கலசபாக்கம் :  கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் எர்ணாமங்கலம், வீரலூர் ஆகிய கிராமங்களில் பழுதடைந்து ஆபத்தான நிலையில் உள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடங்களை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியம் எர்ணாமங்கலம் ஊராட்சியில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

9 ஊராட்சி வார்டுகளை உள்ளடக்கியுள்ள இந்த ஊராட்சியில் ஊராட்சி மன்ற அலுவலகம் கட்டிடம் எப்போது வேண்டுமானாலும் கீழே விழக்கூடிய ஆபத்தான நிலையில் உள்ளது. மழைக்காலங்களில் மழைநீர் கசிந்து உள்ளே புகுவதால் கோப்புகளை பாதுகாக்க முடியவில்லை. 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட பழுதடைந்த ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தை அகற்றிவிட்டு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வருகின்றனர்.

அதேபோல், கலசபாக்கம் அடுத்த வீரலூர் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். 9 வார்டுகள் இந்த ஊராட்சியில் உள்ளது. இங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகத்தின் கான்கிரீட் மேல் தளங்கள் முழுமையாக பழுதடைந்து உள்ளதால் மழைக்காலங்களில் மழைநீர் அலுவலகத்திற்குள் குளம்போல் தேங்குகிறது. தேங்கும் மழைநீரை அலுவலக ஊழியர்கள் வெளியே அகற்ற வேண்டியுள்ளது. மேலும், ஊராட்சி கூட்டங்கள் நடத்த போதிய வசதிகள் இல்லாததால் பெரும் சிரமம் ஏற்படுகிறது.

கலசபாக்கம் ஒன்றியத்தில் பழுதடைந்துள்ள எர்ணாமங்கலம், வீரலூர் ஊராட்சி அலுவலக கட்டிடங்களை உடனடியாக அகற்றிவிட்டு புதிய ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடம் கட்டித்தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். 100 நாள் வேலை திட்டத்தில் நிலையான சொத்துக்களை உருவாக்கும் பொருட்டு கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே கிராம ஊராட்சியில் உட்கட்டமைப்பு வசதியை ஏற்படுத்தும் விதத்தில் 100 நாள் வேலை திட்டத்தில் இப்பணியை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைத்து   தரப்பினரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Related Stories:

>