×

“தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக செயல்படுவோம்” - பொருளாதார ஆலோசனைக் குழுவினர் பேச்சு

சென்னை: நேற்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் ‘முதலமைச்சருக்கான பொருளாதார ஆலோசனைக் குழு’க் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெற்றது.நிதித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. எஸ். கிருஷ்ணன் அவர்கள் வரவேற்புரையாற்றி இக்கூட்டத்தைத் துவக்கி வைத்தார். மாண்புமிகு முதலமைச்சர் திரு. மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டில் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சிக்குக் காரணமான ‘திராவிட மாடல்’ வளர்ச்சி குறித்து பொருளாதார ஆலோசனைக் குழுவினரிடம் எடுத்துரைத்து, தமிழ்நாடு கண்டு வரும் வளர்ச்சியை எதிர்காலத்தில் மேலும் உயர்த்திடவும், இந்த வளர்ச்சியின் பயன்கள் மாநிலத்தின் அனைத்துப் பகுதிகளுக்கும் நமது சமுதாயத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் கிடைப்பதை உறுதிசெய்யவும் தேவையான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார். பின்னர்,தமிழ்நாடு நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத்துறை அமைச்சர் திரு. பழனிவேல் தியாகராஜன் அவர்கள் உரையாற்றினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய பொருளாதார அறிஞர் திருமதி. எஸ்தர் டஃப்லோ அவர்கள் பேசுகையில், பொருளாதார வளர்ச்சிக்கான கொள்கைகள் தகுந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும் எனவும் சமுதாயத்தில் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பிரிவினரின் நலனுக்கு, குறிப்பாக முதியோரின் நலனுக்கு அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

அடுத்ததாக ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு. ரகுராம் ராஜன் அவர்கள் பேசுகையில், கொரோனா பெருந்தொற்றால் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ள சிறு குறு தொழில்களை மீட்டெடுக்க தேவையான உதவிகளை அரசு செய்திட வேண்டும் எனவும், பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள கற்றல் இழப்பை ஈடுசெய்வதற்கான அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் கூறினார்.

அவரைத்தொடர்ந்து பேசிய ஒன்றிய அரசின் முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் திரு. அரவிந்த் சுப்ரமணியன் அவர்கள், உற்பத்தித் துறை, சேவைத் துறை மற்றும் உயர்கல்வி போன்ற பல துறைகளிலும் வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தக்கூடிய வகையில் தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி பன்முகத்தன்மை கொண்டதாக அமைந்திட வேண்டும் என்றும் இத்தகைய வளர்ச்சிக்குத் தேவையான கட்டமைப்பு வசதிகளை, குறிப்பாக மின் வசதிகளை மேம்படுத்திட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

அடுத்து பேசிய பேராசிரியர் திரு. ஜீன் டிரீஸ் அவர்கள், அரசின் செயல்பாடுகளில் வெளிப்படைத்தன்மை உறுதிசெய்யப்பட வேண்டும் என்றும், ஏழை எளியோர்க்கான சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் மேலும் வலுப்படுத்தப்பட வேண்டும் என்றும் கருத்துத் தெரிவித்தார்.

அடுத்து முன்னாள் ஒன்றிய நிதிச் செயலாளர் திரு. எஸ்.நாராயண் அவர்கள் பேசுகையில், அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பல்வேறு அரசு அமைப்புகளின் செயல்திறனை உயர்த்திட வேண்டும் என்றும், வரி நிர்வாகம் சரியாக முறைப்படுத்தப்பட்டு அரசின் வருவாய் பெருக்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

Tags : Tamil Nadu ,Economic Advisory Committee , 'We will work for the economic development of Tamil Nadu' - Economic Advisory Committee talk
× RELATED புதிய குடும்ப அட்டைகள்...