தோமூர் ஊராட்சியில் நெல் கொள்முதல் நிலையம்: அமைச்சர்கள் அர.சக்கரபாணி, ஆவடி சா.மு.நாசர் ஆய்வு

திருவள்ளூர்: திருவள்ளுர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வாயிலாக, உணவுத்துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் நடந்தது. உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை வகித்தார். பால்வளத்துறை அமைச்சர் ஆவடி சா.மு.நாசர் முன்னிலை வகித்தார். இதையடுத்து அமைச்சர் அர.சக்கரபாணி நிருபர்களிடம் கூறுகையில், ‘திருவள்ளுர் மாவட்டத்தில் 7410 பேர் குடும்ப அட்டைக்க விண்ணப்பித்துள்ளார்கள். அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை பெறுகின்ற முறை செப்டம்பர் வரை மட்டுமே கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

 அக்டோபர் 1 முதல் எளிதான முறையில் குடும்ப அட்டைகளை பெற வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என முதல்வர் கூறியுள்ளார். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் நலன் கருதி நியாய விலை கடையில் 3000 குடும்ப அட்டைகள் உள்ள கடைகள் பிரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மாவட்ட நிர்வாகத்தின் வாயிலாக புதிய நியாய விலை கட்டடங்களை கட்ட நிதி ஒதுக்கப்படும். கடையில் பணியாற்றும் பணியாளர்கள் மாதத்தின் 30 நாட்களிலும் பொதுமக்கள் எப்பொழுது பொருட்கள் கேட்டாலும் கனிவோடு வழங்க வேண்டும். மாவட்டத்தில் நெல் அதிகமாக விளைகிறது. நெல் கொள்முதல் நிலையத்தில் நெல் கொள்முதல் செய்கின்ற சமயத்தில் நெல் தேங்கி, மழையில் ஈரமாகி, வீணாக கூடாது. பாதுகாப்பாக வைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு கலெக்டரும் மாதந்தோறும் 10 நியாய விலைக்கடைகளை ஆய்வு செய்ய வேண்டும். பொருட்கள் நல்ல முறையில் மக்களுக்கு சென்றடைய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’ என்றார்.  பின்னர், அமைச்சர்கள் பூண்டி ஊராட்சி ஒன்றியம், தோமூர் ஊராட்சியில் நெல் அரிசி கொள்முதல் நிலையத்தை ஆய்வு செய்தனர். மேலும், வரதாபுரம் ஊராட்சியில் அரிசி ஆலை, திருவள்ளுர் ம.பொ.சி. சாலையில் உள்ள நியாய விலை கடையினை பார்வையிட்டு பொருட்களின் தரம் குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ், எம்எல்ஏக்கள் வி.ஜி.ராஜேந்திரன், ஆ.கிருஷ்ணசாமி, எஸ்.சுதர்சனம், ஜெ.கோவிந்தராஜன், ச.சந்திரன், க.கணபதி, ஜோசப் சாமுவேல், மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் கே.வி.ஜி.உமா மாகேஸ்வரி மற்றும் பலர் உடனிருந்தனர்.

Related Stories:

More
>