×

சென்னை திரும்பினார் ரஜினி: விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: நடிகர் ரஜினிகாந்த், அமெரிக்காவில் மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு நேற்று அதிகாலை விமானத்தில் தோகா வழியாக சென்னை திரும்பினார்.  நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2016ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இதையடுத்து அவர் அவ்வப்போது அமெரிக்கா சென்று உடல்பரிசோதனை செய்து கொள்வார். ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா வைரஸ் முதல் அலை, 2ம் அலை காரணமாக இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கான விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டது. இதனால் ரஜினி அமெரிக்கா செல்ல முடியவில்லை.

இந்நிலையில் தற்போது கொரோனா வைரஸ் 2ம் அலை குறைந்து வருவதால், மத்திய அரசிடம் மருத்துவ காரணங்களை எடுத்துக்கூறி, ஒன்றிய அரசிடம் சிறப்பு அனுமதி பெற்றார். இதையடுத்து, கடந்த ஜூன் 19ம் தேதி அதிகாலை 4 மணிக்கு சென்னையில் இருந்து தோகா செல்லும் கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் கத்தார் வழியாக அமெரிக்கா சென்றார். அங்கு மருத்துவ பரிசோதனையை முடித்துவிட்டு அங்குள்ள மகள் வீட்டில் 3 வாரங்கள் ஓய்வு எடுத்துவிட்டு, வரும் 15ம் தேதி சென்னை திரும்ப திட்டமிட்டிருந்தார்.

ஆனால் 2 வாரம் என ஓய்வை குறைத்துக்கொண்டு அமெரிக்காவில் இருந்து நேற்று புறப்பட்டார். கத்தார் தலைநகர் தோகா வழியாக கத்தார் ஏர்லைன்ஸ் விமானத்தில் நேற்று அதிகாலை 2.40 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தார். அப்போது அங்கு திரண்டிருந்த ரசிகர்கள், அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அவர்களை பார்த்து ரஜினி கையசைத்து விட்டு காரில் புறப்பட்டார். சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடிக்கும் ‘அண்ணாத்த‘ திரைப்படம் வரும் நவம்பர் மாதம் தீபாவளியன்று வெளியாக உள்ளதால், அதற்கான இறுதிக்கட்ட பணிகளில் ரஜினிகாந்த் ஈடுபட உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

Tags : Rajini ,Chennai , Chennai, Rajini, Airport,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...