‘மக்களை தேடி மருத்துவம்’ திட்டம் விரைவில் துவக்கம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம், காஞ்சிரங்காலில் கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடந்தது. இதனை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: சிவகங்கை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கொரோனா தடுப்பு சிகிச்சை வார்டு திறக்கப்பட்டுள்ளது. மூன்றாவது அலை அச்சுறுத்தல் காரணமாக முதல்வர் தமிழகம் முழுவதும் குழந்தைகளுக்கான சிறப்பு வார்டுகள் அமைக்க உத்தரவிட்டுள்ளார். அந்த வகையில் குழந்தைகள் சிறப்பு சிகிச்சை வார்டுகள் அமைக்கப்பட்டு வருகிறது. கட்டிட வசதி, மருந்துகள், உபகரணங்களை வாங்கி கொள்வதற்கு 136 ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு 15வது நிதிக்குழு மூலமாக ரூ.4,729 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

 கொரோனாவிலிருந்து மீண்டு வருவதற்கு மக்கள் இயக்கமாக செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதில் அரசியல் தேவையில்லை.  தமிழகத்தில் சர்க்கரை, உயர் ரத்த அழுத்தத்தில் கோடி பேருக்கு மேல் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில், 20 லட்சம் பேர் மட்டுமே அரசு மருத்துவமனைகளில் மாத்திரைகளை பெற்றுச் செல்கின்றனர். இது வருந்தத்தக்கது. இதனால், ‘மக்களைத் தேடி மருத்துவம்’ என்ற திட்டம் விரைவில் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தில் அனைத்து வகையான நோய்களுக்கும் தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் வீடு தேடி மருந்துகள் வரும் என்றார்.

Related Stories:

More
>